இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தான் முகமது சிராஜை பாராட்டியதாகவும் ஆனால் அவர் தன்னிடம் நடந்து கொண்ட விதம் தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் கூறி இருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்பொழுது அடிலைட் ஓவல் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்று கொண்டு வருகிறது. தற்பொழுது இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் கை ஓங்கி இருக்கிறது.
ஆஸ்திரேலியா அணியின் எழுச்சி
முதல் டெஸ்டில் தோல்வி அடைந்திருந்த ஆஸ்திரேலியா அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் திரும்பி வந்திருக்கிறது. இந்த போட்டியிலும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் எடுத்து சுருண்டது. ஸ்டார்க் மிகச் சிறப்பாக பந்துவீசி ஆறு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிஙசை விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு அந்த அணியின் ஹெட் வழக்கம்போல் அதிரடியாக விளையாடி 141 பந்துகளில் 140 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 128 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் இழந்திருக்கிறது. எனவே இப்போதைக்கு ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றி பிரகாசமாக தெரிகிறது.
ஹெட் – சிராஜ் மோதல்
இந்த நிலையில் ஆஸ்திரேலிய பேட்டிங்கில் ஹெட் விக்கெட்டை முகமது சிராஜ் கைப்பற்றினார். அப்போது இருவருக்கும் இடையே ஏதோ வாய் தகராறு ஏற்பட்டது. ஹெட் ஏதோ சொல்ல முகமது சிராஜ் வெளியே செல் என்பது போல சைகை செய்தார். இதற்கு அடுத்து ஹெட் ஏதோ கோபமாக கூறிவிட்டு களத்தை விட்டு சென்று விட்டார்
இதையும் படிங்க : சிராஜ் கொஞ்சம் அடங்கி இருக்கணும்.. எங்களை தேவை இல்லாம சீண்டிட்டாரு – டேவிட் வார்னர் பேச்சு
தற்போது களத்தில் என்ன நடந்தது? என்று ஹெட் கூறும்பொழுது “நான் சிராஜை பார்த்து சிறப்பாக பந்து வீசினீர்கள் என்று கூறினேன். அவர் என்னை வெளியே செல் என்று கூறிய பிறகு சிறிது சிறிதாக பின்வாங்க ஆரம்பித்தார். அவர் நடந்து கொண்ட விதத்தில் கொஞ்சம் ஏமாற்றம் அடைகிறேன். அவர்கள் இந்த முறையிலேயே நடந்து கொள்ள விரும்புகிறார்கள், இந்த முறையில் நடந்து கொண்டு தங்களை பிரதிநிதித்துவ படுத்த விரும்புகிறார்கள். எனவே அவர்கள் அப்படியே செய்யட்டும்” என்று கூறியிருக்கிறார்.






