இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் எடுத்து சுருண்டது குறித்து இந்திய வீரர் புஜாரா விமர்சனம் செய்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று மேற்கு ஆஸ்திரேலியா பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் தற்காலிக கேப்டன் பும்ரா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் பேட்டிங் பலவீனம்
ஆஸ்திரேலியா சூழ்நிலையில் வேகம் மற்றும் பவுன்ஸ் அதிகம் இருக்கும் என்பது எல்லா கிரிக்கெட்டர்களுக்கும் தெரிந்த விஷயம். இந்த நிலையில் ஆஸ்திரேலிய சூழ்நிலையில் சில ஷாட்களை புதிய பந்தில் விளையாட முடியாது. மேலும் பவுன்ஸ் பந்துகளை விளையாடுவதற்கு தனி தொழில்நுட்பம் வேண்டும். மேலும் முதல் 25 ஓவர்களுக்கு பந்துகளை விட்டு விளையாடுவது முக்கியம்.
இன்று இந்திய பேட்டிங் யூனிட்டில் இதை மிகக் கச்சிதமாக செய்த ஒரே பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் மட்டுமே இருந்தார். மற்றவர்கள் வழக்கம்போல் ஒரே முறையில் பந்தை அடித்து விளையாடுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். இதில் படிக்கல் அடிப்படை பேட்டிங் டெக்னிக் கூட இல்லாமல் மிகவும் தடுமாறினார். இதனால் இந்திய அணி முழுமையாக 50 ஓவர்கள் கூட விளையாடாமல் 150 ரன் மட்டும் எடுத்து சுருண்டது.
பாரம்பரிய முறையில் திரும்ப வேண்டும்
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி கடந்த இரண்டு முறை டெஸ்ட் தொடரை வென்ற பொழுதும் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்திருந்த வீரரான புஜாரா இந்திய பேட்ஸ்மேன்கள் என்ன மாதிரியான தவறு செய்கிறார்கள்? அவர்கள் எதை சரி செய்து கொள்ள வேண்டும்? என்பது குறித்து கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : ஐபிஎல் மெகா ஏலத்தில்.. புதிதாக சேர்க்கப்பட்ட 3 வீரர்கள்.. பிசிசிஐ ஒப்புதல்.. காரணம் என்ன?
இதுகுறித்து புஜாரா கூறும்பொழுது “எல்லா நேரங்களிலும் நம்மால் ஆக்ரோஷமாக விளையாட முடியாது. நாம் பாரம்பரிய முறைக்கு திரும்பி நம்முடைய தடுப்பாட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டும். சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஆக்ரோஷம் மற்றும் தடுப்பாட்டம் என தேவைக்கு விளையாட வேண்டும். விளையாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப மாறாமல் நீங்கள் ஒரே பாணியில் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடவே முடியாது” என்று கூறி இருக்கிறார்.






