நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டி20 தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் போட்டியில் இலங்கை அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
இரண்டு டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதனை சமன் செய்ய அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இலங்கை நியூசிலாந்து முதல் டி20 போட்டி
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று வரலாறு படைத்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்ததாக இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரும் அதற்குப் பிறகு மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் தற்போது நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. சான்ட்னர் தலைமையில் ஆன நியூசிலாந்து அணி இலங்கை அணியின் அபாரமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியது.
அதிகபட்சமாக மிடில் வரிசை பேட்ஸ்மேன் பிரேஸ்வெல் 24 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். கேப்டன் சான்ட்னர் 16 ரன்கள் அடிக்க இறுதிக்கட்ட பேட்ஸ்மேன் பால்க்ஸ் 16 பந்துகளில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் என 27 ரன்கள் குவித்தார். இதில் இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக துணித் வெல்லால்கெ சிறப்பாக பந்து வீசி 3.3 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் நடந்து முடிந்த இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணி களம் இறங்கியது.
சிறப்பான வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி
நியூசிலாந்து அணியின் பந்து வீச்சிலும் இலங்கை தடுமாறினாலும் நிதானமான முறையில் விளையாடி 19 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் அசலங்கா 28 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்சர்கள் என 35 ரன்கள் குவித்தார். இதனால் இலங்கை அணி ஆறு பந்துகள் மீதம் வைத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது.
இதையும் படிங்க:சென்னை அணியில் ரிஷப் பந்த்.? அப்போ ருதுராஜ் கேப்டன் பொறுப்பை விட்டு விலகுவாரா? – சிஎஸ்கே சிஇஓ சூசக தகவல்
இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை தம்புல்லா மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடரை முழுமையாக கைப்பற்ற இலங்கை அணியும், சமன் செய்ய நியூசிலாந்து அணியும் போராடும் என்பதால் இந்த போட்டி ரசிகர்களுக்கு நிச்சயமாக சுவாரசியமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.






