இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரங்களில் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் பேட்டிங் ஃபார்ம் தற்போது கவலைக்குரிய வகையில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பசித் அலி விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
விராட் ரோஹித் மோசமான பேட்டிங் ஃபார்ம்
தற்போது நடைபெற்ற முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் மோசமான பேட்டிங் காரணமாக இந்திய அணி டெஸ்ட் தொடரை முற்றிலுமாக இழந்தது என்று கூறலாம். அந்த அளவிற்கு இந்த இரண்டு வீரர்களின் பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமானதாக அமைந்தது. அதற்கு முன்னதாக நடைபெற்ற இலங்கை ஒருநாள் தொடரிலும் மோசமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தினார்கள்.
இந்த சூழ்நிலையில் இதே மாதிரியான பேட்டிங்கை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் வெளிப்படுத்தினால் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும். எனவே இந்திய ரசிகர்கள் இவர்கள் இருவரும் விரைவாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பசித் அலி இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு முன்னர் செய்ததை மறந்து விடக்கூடாது என்று சில கருத்துக்களை கூறி இருக்கிறார்.
முன்பு செய்ததை நினைத்துப் பாருங்கள்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக இதே மும்பையில் இந்திய அணி டி20 உலக கோப்பை ஜெயித்ததற்கு பாராட்டு விழா நடந்தது. அப்போது ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோரை மூன்று வடிவங்களில் இருந்தும் ஓய்வு பெற வேண்டும் என்று ஏன் கூறவில்லை? நீங்கள் ஒரே நாளில் அவர்களை மதிப்பிழந்த வீரர்களாக மாற்றுகிறீர்கள், ஆனால் கடந்த காலங்களில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டதை மறந்து விடுகிறீர்கள்.
இதையும் படிங்க:நாங்க குறி வச்சது ஒரே இந்திய பேட்ஸ்மேனுக்குதான் .. அவரை பார்த்து பயந்தோம் – நியூஸி அஜாஸ் படேல் பேச்சு
எங்கள் பாகிஸ்தான் அணி அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா மற்றும் வங்கதேச அணியிடம் தோற்றது. இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தோற்றதால் மக்கள் கோபமாக இருக்கின்றனர். தயவு செய்து உங்கள் மனதில் இது குறித்து யோசித்துப் பாருங்கள். இதே ரோகித் சர்மாதான் 2023 உலக கோப்பை மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடினார். விராட் கோலி அகமதாபாத்தில் 186 ரன்கள் எடுத்திருக்கிறார். இப்போது அவர்கள் ரன்கள் குவிக்காததால் விமர்சிக்கிறீர்கள், ஆனால் இதற்கு முன்பும் அவர்கள் இப்படி ஒரு நிகழ்வை பார்த்து இருக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.






