இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடக்கூடியவராக தெரியும் சூரியகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பை எவ்வாறு சமாளிப்பார்? என்கின்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது சூரியகுமார் யாதவ் தன்னுடைய கேப்டன்சி யார் போல இருக்கும் எனக் கூறியிருக்கிறார்.
சூரியகுமார் யாதவ் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் கேப்டனாக இருந்திருக்கிறார். மேலும் அவர் இரண்டு தொடர்களையும் இழக்கவில்லை. அவருக்கு கொடுக்கப்பட்ட இடைக்கால கேப்டன் பொறுப்பை சரியாகவே செய்திருந்தார்.
இதில் குறிப்பாக கேப்டன் பொறுப்பு அவருடைய பேட்டிங்கை பாதிக்கவே இல்லை. மேலும் வீரர்களை அவர் மிகச் சிறப்பாக அரவணைத்து நட்புடன் நடத்தினார். மேலும் தற்போது அவருக்கு கேப்டன் பொறுப்பு கிடைத்ததற்கு மிக முக்கிய காரணமாக, மற்ற இந்திய வீரர்கள் அவர் குறித்து நல்ல விதமாக கூறியதால்தான் என்று பேசப்படுகிறது.
சூரியகுமார் யாதவ் இதுவரையில் அதிகபட்சமாக கவுதம் கம்பீர் மற்றும் ரோகித் சர்மா என இரு கேப்டன்களின் கீழ் விளையாடி வந்திருக்கிறார். விராட் கோலியின் தலைமையில் அவர் அதிக போட்டிகளில் விளையாடவில்லை. நாளை முதல் முழு நேர இந்திய அணியின் டி20 கேப்டனாக இலங்கை அணிக்கு எதிராக சூரியகுமார் யாதவ் களமிறங்குகிறார்.
இந்த நிலையில் கேப்டன் பொறுப்பு குறித்து பேசி இருக்கும் சூரியகுமார் யாதவ் கூறும்பொழுது ” ரோகித் சர்மா எனக்கு தலைவராக இருந்தார். அவரிடம் இருந்து நான் தலைமைத்துவத்தைக் கற்றுக் கொண்டேன். கேப்டன்ஷியில் என்னுடைய டெம்ப்ளேட் அவருடையது போலத்தான் இருக்கும்.
2014ஆம் ஆண்டு ஆரம்பித்த என்னுடைய பயணத்தில் தற்பொழுது 10 வருடங்களில் நான் மிகப்பெரிய அளவில் மாறி இருக்கிறேன். இதில் கேப்டன்சி பற்றி நான் நிறைய கற்றுக் கொண்டேன். குறிப்பாக என்னுடைய கேப்டன் ரோஹித் சர்மாவிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : கோலியை விட இவர்தான் பெஸ்ட் பேட்ஸ்மேன்.. ஆனா ஆர்ச்சர் பும்ராகிட்ட இதுல வரவே முடியாது – ஷமர் ஜோசப் தேர்வு
சூரியகுமார் யாதவ் 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலக கோப்பை வரையில் இந்திய டி20 அணியின் கேப்டனாக தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு ஆண்டு காலங்களில் கேப்டனாக மட்டும் அல்லாமல் விராட் கோலி ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடங்களை நிரப்புவதற்கான வீரர்களையும் அடையாளம் காணும் குழுவில் சூரியகுமார் யாதவும் இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






