அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணியும் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருகிறது என்ற தகவல் வெளியான நிலையில், அதற்கான விளக்கத்தை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது.
1996ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் பெரிய ஐசிசி தொடர் இதுவாகும். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ஆனது அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி தொடங்கி மார்ச் ஒன்பதாம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் இறுதிப் போட்டி லாஹூரில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி 2008ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் சென்று எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கு பெறவில்லை. சில பாதுகாப்பு காரணங்கள் கருதி இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானில் விளையாட மறுத்து வந்த நிலையில் இந்தத் தொடரிலும் பங்கு பெற மறுத்து வந்தது. மேலும் போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்துமாறு பிசிசிஐ வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியானது.
இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பலரும் தங்கள் காரசாரமான வாதங்களை தெரிவித்து வந்தனர். ஐசிசி இந்திய கிரிக்கெட் வாரியத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்ற தகவல் வெளியான நிலையில், தற்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தானில் கலந்து கொண்டு விளையாட மறுக்கிறது என்ற தகவலும் வெளிவந்தது.
இந்த நிலையில் கொழும்பில் நடைபெற்ற ஐசிசி வருடாந்திர கூட்டத்தில் பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மிர்வைஸ் அஷ்ரப் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நசீப் கான் ஆகியோர் சந்தித்து ஆப்கானிஸ்தான் தங்களது முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நிச்சயமாக கலந்து கொள்ளும் என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் தற்போது பரவிய வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:177 ரன் 13.4 ஓவர்.. கிருஷ்ணமூர்த்தி அதிரடி பேட்டிங்.. ஸ்டீவ் ஸ்மித்தின் வாஷிங்டன் அணி தோல்வி.. எம்எல்சி 2024
அது மட்டுமல்லாமல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் இணைந்து இளையோர் முத்தரப்பு தொடர்களை நடத்துவதற்கான திட்டங்களையும் வகுத்திருக்கிறது. மேலும் பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வேக்கு ஆப்கானிஸ்தான் ஏ அணி சுற்றுப்பயணம் செய்வது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் செய்தி குறிப்பில் கூறப்படுகிறது.






