இலங்கையில் நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் எல்பிஎல் டி20 லீக் ஐந்தாவது எடிசனில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜாப்னா கிங்ஸ் மற்றும் காலே மார்வெல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்தப் போட்டியில் அனாயசமாக 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஜாப்னா கிங்ஸ் அணி சாம்பியன் ஆனது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜாப்னா கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. காலே மார்வெல்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேலஸ் 9 பந்தில் 6 ரன்கள், டிக்வெல்லா 8 பந்தில் 5 ரன் எடுத்து ஏமாற்றினார்கள். இதைத் தொடர்ந்து வந்த ஜனித் லியாங்கே 8 பந்தில் 7 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதற்கு அடுத்து நியூசிலாந்தின் டிம் செய்பர்ட் 37 பந்தில் 47 ரன்கள் எடுக்க, இன்னொரு முறையில் பானுக ராஜபக்சே வெறும் 34 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் குவித்து மிரட்டினார். காலே மார்வெல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. அஷிதா பெர்னாடோ 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ஜாப்னா கிங்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்கார பதும் நிசாங்கா ஆட்டத்தின் முதல் பந்திலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தார். ஆனால் இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த இலங்கையின் குசால் மெண்டிஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ரைலி ரூசோவ் இருவரும் ருத்ர தாண்டவம் ஆடி காலே மார்வெல்ஸ் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள்.
சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தார்கள். இந்த ஜோடியில் தொடர்ந்து அதிரடி காட்டிய ரைலி ரூசோ சதம் அடித்து அசத்தினார். இரண்டாவது விக்கட்டுக்கு 93 பந்துகளை சந்தித்த இந்த ஜோடி 185 ரன்கள் குவித்து போட்டியை ஒட்டுமொத்தமாக முடித்து, ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஜாப்னா கிங்ஸ் அணியை சாம்பியன் ஆக்கியது. குசால் மெண்டிஸ் 40 பந்துகளில் 70 ரன்கள், ரைலி ரூசோவ் 53 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க : வெறும் 82 ரன்கள் 10 விக்கெட்.. 241 வித்தியாசம்.. வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி.. இங்கிலாந்து பிரம்மாண்ட வெற்றி.. 2-0 தொடரையும் கைப்பற்றியது
2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எல்பிஎல் டி20 லீக் தொடரில் இது ஐந்தாவது சீசன் ஆகும். இந்த ஐந்து சீசனங்களில் கடந்த சீசன் மட்டுமே வனிந்து ஹசரங்கா தலைமையிலான கண்டி அணி சாம்பியன் ஆனது. மேற்கொண்டு நடைபெற்று இருக்கும் நான்கு எல்பிஎல் சீசன்களிலும் ஜாப்னா கிங்ஸ் அணியே சாம்பியன் பட்டம் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது!






