கடந்த டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி கைப்பற்றியது. வீரராக மட்டுமில்லாமல் கேப்டன் ஆகவும் அவர் எடுத்த முடிவுகள் இந்திய அணி கோப்பையை வெல்ல மிகவும் உதவியாக இருந்தது. ரோகித் சர்மாவின் கேப்டன்சி திறமைகள் குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மஹாம்ப்ரே பேசியிருக்கிறார்.
ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருந்தாலும் கூட, அதற்கு முன்பாகவே 90 சதவீத டி20 உலகக்கோப்பை இந்திய அணி குறித்தான முடிவை எடுத்தது, நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் தேவை என்ற முடிவுக்கு வந்தது, டி20 உலகக்கோப்பையில் விராட் கோலியை துவக்க இடத்திலும், ரிஷப் பண்ட்டை மூன்றாவது இடத்திலும் களம் இறக்கியது என நிறைய சிறப்பான விஷயங்களை கேப்டனாக ரோகித் சர்மா செய்திருந்தார்.
இதுகுறித்து பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மஹாம்ப்ரே கூறும் பொழுது ” டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பும்ராவுக்கு அவர்
16வது வரை கொடுத்தார். பும்ராவை பதினெட்டு மற்றும் இருபதாவது ஓவர்களுக்கு கொண்டுவந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவர் பும்ராவை வைத்து அங்கு ஹெட் விக்கெட்டை கைப்பற்றினார். இந்தியா அந்த போட்டியை வெல்ல கேப்டனாக அவர் எடுத்த அந்த முடிவு மிக முக்கியமானது.
அவர் இத்தனை ஆண்டுகளாக கேப்டனாக இருந்து வருகிறார். அவருக்கு விளையாட்டு குறித்த சூழலும் விழிப்புணர்வும் நிறைய இருக்கிறது. நீங்கள் ஐபிஎல் தொடரிலும் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை இப்படி பார்க்கலாம். அவர் தனது உள்ளுணர்வுகளின் படி முடிவுகளை எடுக்கக் கூடியவராக இருக்கிறார்.
ரோகித் ஷர்மா கேப்டனாக ஆட்ட சூழ்நிலையை மிகச் சரியாக ரீட் செய்கிறார். அவருக்கு குறிப்பிட்ட நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மிக நன்றாகத் தெரியும். சில நேரங்களில் விக்கெட்டை கைப்பற்ற வேண்டி இருக்கும், சில நேரங்களில் போட்டியை ஆழமாக எடுத்துச் செல்ல வேண்டியது இருக்கும். அவர் இந்த விஷயத்தை மிகச் சரியாகப் புரிந்து கொள்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் விக்கெட் கைப்பற்ற வேண்டிய சூழ்நிலையை புரிந்து அந்த முடிவை எடுத்து ஹெட் விக்கெட்டை கைப்பற்றினார்.
இதையும் படிங்க : 2025 சாம்பியன்ஸ் டிராபி..இந்தியா புறக்கணிக்க முடியுமா?.. அப்படி செய்தால் யாருக்கு வாய்ப்பு.. – முழு தகவல்கள்
இதற்கு இன்னொரு உதாரணத்தையும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகச் சொல்ல முடியும். கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் பேட்டிங் செய்து ஓவருக்கு எட்டு அல்லது பத்து ரன்கள் எடுத்து 18 வது ஓவரில் போட்டியை முடித்து விடுவார்கள் என்று எங்களுக்கு தெரியும். எனவே அந்த நேரத்தில் பும்ராவை முன்கூட்டியே கொண்டு வந்ததால், ஹர்திக் பாண்டியாவிடமிருந்து ஒரு ஓவரை வாங்க வேண்டி இருந்தது. அதை மிகச் சிறப்பாக ரோகித் சர்மா செய்து ஒரு ஓவரை எடுத்தார். அது நல்ல பலன் தரக்கூடியதாக அந்த இடத்தில் இருந்தது” என்று கூறி இருக்கிறார்.






