நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மாவின் அதிரடி பேட்டிங்கால் இந்திய அணி அசத்தலான வெற்றி பெற்றது.
இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இந்திய அணிக்கு இந்த வரையும் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். ரிஷப் பண்ட் 14 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். ஒரு முனையில் நிலைத்து நின்ற விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா ருத்ர தாண்டவம் ஆடினார். 41 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்களுடன் 92 ரன்கள் எடுத்தார்.
இதற்கு அடுத்து சூரியகுமார் யாதவ் 16 பந்தில் 31 ரன்கள், சிவம் துபே 22 பந்தில் 28 ரன்கள், ஹர்திக் பாண்டியா 17 பந்தில் 27* ரன்கள், ரவீந்திர ஜடேஜா 5 பந்தில் 9* ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் மற்றும் ஸ்டோய்னிஸ் இருவரும் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.
இதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் 6 பந்தில் 6 ரன்கள், கேப்டன் மிட்சல் மார்ஸ் 28 பந்தில் 37 ரன்கள், மேக்ஸ்வெல் 12 பந்தில் 20 ரன்கள், ஸ்டோய்னிஸ் 4 பந்தில் 2 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். ஆனால் ஒரு முனையில் இந்த டிராவிஸ் ஹெட் வழக்கம் போல் பயம் காட்டினார். கடைசியாக பும்ரா பந்துவீச்சில் 43 பந்தில் 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதற்குப் பிறகு ஆட்டம் இந்தியா பக்கம் வந்தது. மேத்யூ வேட் 2 பந்தில் 1 ரன், டிம் டேவிட் 11 பந்தில் 15 ரன், கம்மின்ஸ் 7 பந்தில் 11* ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : அதிவேக டீம் 100.. 200 சிக்ஸர்ஸ்.. ஆஸியை ஓடவிட்ட ரோகித்.. தனி வீரராக பல சாதனைகள்.. மிரண்டு நின்ற பவுலர்கள்
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது ரோகித் சர்மாவிற்கு கொடுக்கப்பட்டது. இதன் மூலம் டி20 உலக கோப்பையில் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்திய கேப்டன் என்கின்ற அரிய சாதனையை படைத்திருக்கிறார். மேலும் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ் அடித்த கேப்டன் பட்டியலில் 48 சிக்ஸ் அடித்து பாபர் அசாம் சாதனையை சமன் செய்திருக்கிறார். இந்திய நேரப்படி நாளை காலை ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில், ஆப்கானிஸ்தான அணி வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு தகுதி பெறும். இல்லையென்றால் ஆஸ்திரேலியா அணி தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.






