இன்றைய டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தனி ஒரு வீரராக நின்று பேட்டிங் செய்து செர்பான் ரூதர்போர்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை அடுத்த சுற்றுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இன்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் வெற்றிக் குறித்து பேசி இருக்கிறார்.
நியூசிலாந்து அணி டாஸ் வெல்ல முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இன்டீஸ் அணி 30 ரன்னில் 5 விக்கெட், 56 ரன்னில் 6 விக்கெட், 76 ரன்னில் 7 விக்கெட் என படுமோசமாக சரிந்தது. மேலும் 112 ரன்கள் எடுத்திருந்தபோது 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. கடைசி இரண்டு ஓவர்கள் இருந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 130 ரன்கள் எடுக்கலாம் இல்லை அதைவிட குறைந்த ரன்னில் ஆல் அவுட் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் பேட்டிங் வரிசையில் ஆறாவதாக வந்த ரூதர்போர்டு அதற்குப் பிறகு வந்த ஒவ்வொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்களையும் வைத்துக்கொண்டு தனி ஆளாக ரன்களை திரட்டி அசத்தினார். இறுதிவரை களத்தில் நின்ற அவர் 39 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் அவர் மொத்தம் 37 ரன்கள் விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது.
இதற்குப் பிறகு இலக்கை நோக்கி பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டும் எடுத்து 13 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் நான்கு விக்கெட் மற்றும் குடகேஷ் மோட்டி மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ரூதர்போர்டு பேசும்போது “இந்த வாய்ப்பிற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் ஐபிஎல் தொடரில் இரண்டு மாதங்கள் விளையாடாமல் சும்மா இருந்தேன். ஆனால் இந்த நேரத்தை நான் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராவதற்கு பயன்படுத்தினேன். இந்த போட்டியை ஆழமாக எடுத்துச் செல்வதே என் திட்டம். இது குறித்து பயிற்சியாளர் டேரன் சமியிடம் பேசிக் கொண்டிருந்தேன். நாங்கள் ஸ்ட்ரை ரொட்டேட் செய்து போட்டியை ஆழமாக எடுத்துச் செல்ல முடிவு செய்தோம்.
இதையும் படிங்க : நியூசிலாந்து வெளியேற்றம்? வெறுப்பா இருக்கு.. எந்த சாக்குப் போக்கும் சொல்ல விரும்பல – கேன் வில்லியம்சன் பேச்சு
கடைசிக் கட்டத்தில் என்னால் இதை ஈடு செய்ய முடியும். கடைசி இரண்டு ஓவர்களுக்கு அவர்களுடைய பந்துவீச்சில் ஸ்பின்னர் வர வேண்டி இருந்தது. எனவே ஆழமாக செல்ல விரும்பினேன். நான் இதுகுறித்து ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தேன். அந்த இரண்டு ஓவரில் 37 ரன்கள் கிடைத்தது. இந்த திட்டம் நன்றாக வேலை செய்தது. வரவிருக்கும் ஏதோ சிறந்த ஒன்றுக்கு இது ஆரம்பம் என்று நினைக்கிறேன். இரவு நான் கோழிக்கறி தின்பேன்” என்று கூறியிருக்கிறார்.






