நடப்பு டி20 உலகக்கோப்பை எட்டாவது போட்டியில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நியூயார்க் நாசாவ் கவுன்டி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி அபார பந்துவீச்சில் அயர்லாந்து அணியைச் சுருட்டி இருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இந்த போட்டி நடைபெறும் ஆடுகளம் ஏற்கனவே பங்களாதேஷ் அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் விளையாடிய ஆடுகளம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றைய போட்டியில் யாரும் எதிர்பார்க்காத ஒரு மாற்றத்தை கேப்டன் ரோஹித் சர்மா செய்திருந்தார். முகமது சிராஜ் உடன் மூன்று வேத பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு, மேலும் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரையும் அணிக்குள் சேர்த்திருந்தார். மேலும் சிவம் துபேவும் அணியில் இடம் பெற்றார். இதனால் குல்தீப் யாதவ் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் எதிர்பார்த்தது போலவே சூழ்நிலை மற்றும் ஆடுகளம் என இரண்டுமே பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தன. இதன் காரணமாக அயர்லாந்து பேட்ஸ்மேன்களால் ரன்கள் எளிதாக எடுக்க முடியவில்லை. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் பால் ஸ்டெர்லிங் 6, பால்பேரின் 10 பந்தில் 5 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.
இதைத் தொடர்ந்து அயர்லாந்து அணியின் விக்கெட்டுகள் மளமளவென்று சரிந்தன. அயர்லாந்து அணி முழுதாக 50 ரன்கள் எடுத்த பொழுது எட்டு விக்கெட்டுகளை இழந்தது. இதற்கு அடுத்து டெலனி 16 பந்தில் அதிரடியாக 16 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். இறுதியில் அயர்லாந்து அணி 16 ஓவர்களில் 96 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதையும் படிங்க : ரோகித் விராட் சேர்ந்து விளையாட மாட்டாங்க.. கேப்டனுக்கு வேற ஒரு கணக்கு இருக்கு – ஸ்ரீகாந்த் பேட்டி
இந்திய அணியின் தரப்பில் அர்ஸ்தீப் மற்றும் பும்ரா இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். சிறப்பாக பந்து வீசிய ஹர்திக் பாண்டியா மூன்று விக்கெட் கைப்பற்றினார். இந்த போட்டியில் மூன்று விக்கெட் கைப்பற்றியதின் மூலம் ஹர்திக் பாண்டியா ஐசிசி தொடர்களில் 500 ரன்கள் மற்றும் 30 விக்கெட்களுக்கும் மேல் எடுத்த இந்திய வீரர் என்கின்ற சாதனையை யுவராஜ் சிங்குக்கு அடுத்து படைத்தார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஃபுல் மெம்பர் அணியில் பும்ரா தனது 11வது மெய்டன் ஓவர் வீசி அதிக மெய்டன் ஓவர் வீசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். 2வது இடத்தில் புவனேஸ்வர் குமார் பத்து மெய்டன் ஓவர்களுடன் இருக்கிறார்






