சிஎஸ்கே அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்து வந்த மகேந்திர சிங் தோனி, நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி, 27 வயதான இளம் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராட்சை புதிய கேப்டனாக கொண்டு வந்தார்.
இந்த நிலையில் 17வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் முதல் போட்டியில் முதல் வெற்றியை பெற்றது.
இன்றைய போட்டியில் சிஎஸ்கே டாசை இழக்க, டாசை வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்து 20 ஓவர்கள் முடிவில் 173 ரன்கள் 6 விக்கெட் இழப்புக்கு எடுத்தது. நன்றாக ஆரம்பித்து பவர் பிளேவில் மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து, ஆனால் இறுதிக் கட்டத்தில் திரும்பி வந்து ரன்கள் சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் இந்த அணிக்காக முதல் ஆட்டத்தில் விளையாடும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் 15 பந்தில் 15 ரன்கள் எடுத்தார். இன்னொரு துவக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா 15 பந்தில் அதிரடியாக 37 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆட்டம் இழக்காமல் சிவம் துபே 34, ரவீந்திர ஜடேஜா 25 ரன்கள் எடுக்க, சிஎஸ்கே அணி 17வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வென்றது.
ஆட்டத்தில் இதுதான் திருப்புமுனை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது முதல் போட்டியில் வெற்றி பெற்ற புதிய கேப்டன் ருதுராஜ் வெற்றி குறித்து பேசும் பொழுது “ஆட்டத்தில் இரண்டு மூன்று ஓவர்களுக்கு பிறகு மொத்த கட்டுப்பாடு எங்கள் கைகளுக்கு வந்து விட்டதாக நினைக்கிறேன். அவர்கள் 10, 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டதாக நினைப்பார்கள். ஆனால் அவர்கள் இறுதியில் சிறப்பாக விளையாடிய ரன்கள் கொண்டு வந்தார்கள் என்று நினைக்கிறேன். மேக்ஸ்வெல் மற்றும் பாப் டு பிளிசிஸ் இருவரும் அடுத்தடுத்து வெளியேறியதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தது.
நாங்கள் முதல் மூன்று விக்கெட்டை சீக்கிரத்தில் பெற்றது அடுத்தடுத்த ஓவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவியது. அங்குதான் உண்மையான திருப்புமுனை உருவானது. கேப்டன் பொறுப்பை ஒரு கூடுதல் அழுத்தமாக நான் உணர்ந்தது கிடையாது. இந்த பொறுப்பை கையாள்வதில் எனக்கு ஏற்கனவே அனுபவம் இருந்தது. வெளிப்படையாக என்னுடன் மஹி பாய் இருக்கிறார்.
இதையும் படிங்க : சிஎஸ்கே என்ன செய்யும்னு தெரியும்.. நாங்க தோத்தது இந்த இடத்துலதான் – ஆர்சிபி கேப்டன் பேச்சு
எங்கள் அணியில் இருக்கக்கூடிய எல்லோருமே இயற்கையாக அடித்து விளையாட கூடியவர்கள் என்று நினைக்கிறேன். ரகானே கூட நேர்மறையாக அடித்து விளையாடுகிறார். ஒவ்வொருவருக்குமே அவர்களுடைய ரோல் என்னவென்று எந்த பந்துவீச்சாளரை தாக்கி விளையாட வேண்டும் என்றும் நன்றாக தெரியும். எல்லோருக்கும் அவரவர் ரோலில் தெளிவு இருப்பது நல்லதாக அமைந்திருக்கிறது. எல்லோரும் நன்றாக பேட்டிங் செய்தார்கள். ஆனால் முதல் மூன்று இடங்களில் வரக்கூடிய, எங்களில் ஒரு பேட்ஸ்மேன் 15 ஓவர்கள் வரை விளையாடு இருந்தால் எல்லாம் இன்னும் கொஞ்சம் எளிதாக இருந்திருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






