நடப்பு ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு மீண்டும் நம்பிக்கையை கொண்டு வந்த முக்கிய தொடராக அமைந்திருக்கிறது!
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைமிக நெருக்கத்தில் இருக்கும் நேரத்தில், இந்திய அணி ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்திய விதம், இந்திய அணியின் நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது.
இந்திய அணி ஆசியக் கோப்பைக்கு பயணப்படும் பொழுது, எந்தத் தெளிவும் இல்லாத ஒரு அணியாகத்தான் காட்சியளித்தது. மேலும் முக்கிய வீரர்கள் சிலர் காயத்திலிருந்து மீண்டு வந்திருந்தார்கள். அவர்களின் செயல்பாடு எப்படி இருக்கும்? என்று யாருக்கும் தெரியாது.
இந்த நிலையில் ஆசியக் கோப்பை ஆரம்பித்த விதம் இந்திய அணிக்கு நல்லபடியாக அமையவில்லை. ஆனால் அதற்கு அடுத்து பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி, இந்திய அணிக்கு தன் மீது இருந்த சந்தேகங்களை கூட துடைத்து விட்டது.
இந்தத் தொடரில் ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களை கடந்தார். விராட் கோலிக்கு அடுத்து வேகமாக பத்தாயிரம் ரன்னை தொட்டவர் என்ற சாதனையை படைத்தார். மேலும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 13,000 ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இதில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பற்றி பேசியுள்ள ஏ பி டிவில்லியர்ஸ்
“ரோஹித் சர்மா தனது முதல் 2000 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் மெதுவாக அடித்த வீரர்களில் நான்காவது இடம் பிடித்தவர் ஆக இருந்தார். ஆனால் பத்தாயிரம் ரண்களை ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக கடந்த இரண்டாவது வீரராக மாறி இருக்கிறார். இது எவ்வளவு பெரிய கம் பேக்!
நான் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவர் விளையாடுவதை நான் முதல் முறையாக பார்த்த பொழுது அவரிடம் ஏதோ சிறப்பு இருப்பதாக நான் உணர்ந்தேன். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் சிறிய வயதில் இருந்தே போராடும் குணம் கொண்டவர். அவர் யாரிடமும் பின் வாங்க மாட்டார்!” என்று கூறியிருக்கிறார்!






