நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி சிக்கலான சூழ்நிலையில் இருந்து மீண்டு வெற்றி பெற்றது குறித்து இந்திய முன்னாள் வீரர் கிரிஸ் ஸ்ரீகாந்த் பெருமிதம் தெரிவித்துப் பேசியுள்ளார்.
இரண்டாவது டி20 போட்டியில் 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய திலக் வர்மா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பெரிய பவுண்டரி அளவைக் கொண்ட மைதானத்தில் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்காமல், ஒற்றை ரன்களை எடுப்பதிலும் பவுண்டரிகளை அடிப்பதிலும் கவனம் செலுத்தினர்.
இந்த அற்புதமான ஜோடி அணியைச் சரிவிலிருந்து மீட்டு கடைசி ஓவரில் வெற்றியை உறுதி செய்தது. திலக் வர்மா 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 51 ரன்களையும், நிதிஷ் குமார் ரெட்டி 13 பந்துகளில் 26 ரன்களையும் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தனர்.
இதுகுறித்து முன்னாள் இந்திய கேப்டன் கிரிஸ் ஸ்ரீகாந்த் பேசும்போது, “ஐதராபாத் பையன்கள் (திலக் மற்றும் நிதிஷ்) நியூசிலாந்து பவுலர்களைக் கொண்டு சரியான பிரியாணியைச் சமைத்துவிட்டார்கள். இது ஒரு பெரிய மைதானம் என்பதைப் புரிந்து கொண்டு, அவர்கள் தேவையில்லாமல் ஸ்லொக் செய்து சிக்ஸர்களை அடிக்கப் போகவில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் பவுண்டரிகளை அடிக்கவும், பிளேஸ்மென்ட் மற்றும் புதுமையான ஷாட்களிலும் கவனம் செலுத்தினர். ஒன்ஸ்களை டூஸ்களாகவும், டூஸ்களை த்ரீஸ்களாகவும் மாற்றுவதில் திலக் மிகச்சிறப்பாகச் செயல்பட்டார். ஒரு ஃபினிஷராக திலக் அழுத்தத்தை அழகாகக் கையாள் கிறார். திலக்கும் நிதிஷும் அழுத்தத்தை அற்புதமாக எதிர்கொண்டனர்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் இந்தத் தொடரில் மற்றொரு இளம் வீரரான நமன் திர் செய்த தாக்கத்தையும் கிரிஸ் ஸ்ரீகாந்த் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்கும் வகையில் அவர் ஆடிய அதிரடியான ஆட்டம் எதிரணி பவுலர்களைக் குழப்பமடையச் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.






