வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி சமன் செய்து ஏமாற்றம் அளித்திருக்கும் நிலையில், இந்திய அணியின் சுமாரான ஆட்டம் குறித்து இந்திய முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார்.
சொந்த மண்ணில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில், பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற பிறகு, 249 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் இரண்டாவது போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது. மூன்றாவது போட்டியில் மீண்டு வந்தாலும், நான்காவது போட்டியில் மீண்டும் தோல்வியை சந்தித்தது.
இதுகுறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்போது “ஒரு சுமாரான வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்தியா தொடரை சமன் செய்ததும், தொடரை இழக்கும் நிலைக்கு சென்றதும் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் பேட்டிங் ஃபயர் பவர் இருக்கிறது, ஆனால் அவர்களின் பவுலிங் மிகவும் மோசமானது. ஸ்பிரிங்கர் போன்ற பெரிய அளவில் அறியப்படாத வீரர்களுக்கு கூட விக்கெட் எடுக்க இந்தியா அனுமதித்து விட்டது”
“ஆனால் இந்திய பவுலிங் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. மேலும் இதுபோன்ற 250 ரன்கள் குவிக்கும் பிட்ச்களில் விளையாடுவது அநீதியானது. பவுலர்களுக்கு ஏதாவது உதவி இருக்கும் வகையில் பிட்ச் அமைய வேண்டும். முற்றிலும் பேட்டிங் ஆதிக்கமாக மட்டுமே மாறுவது போட்டியை பார்ப்பதற்கே சலிப்பை ஏற்படுத்துகிறது” என்று கூறியிருக்கிறார்.
மேலும் புவனேஷ்வர் குமார் குறித்து பேசும்போது “ஒருவகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் புவனேஷ்வர் குமார் பந்துவீசாதது நன்மைக்கே. ஏனெனில் புவனேஷ்வர் குமார் ரீஎன்ட்ரி கொடுக்க நியூசிலாந்து சூழ்நிலைகளே மிகவும் சிறந்தது. நியூசிலாந்தில் இதுபோன்ற அதிக ரன்கள் குவிக்கும் ஸ்கோர்களை நாம் பார்க்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.






