ரஞ்சி டிரோஃபி தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வரும் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவது குறித்தும் தனது ஃபிட்னஸ் தொடர்பான கேள்விகள் குறித்து கூறியிருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க தீவிர முயற்சி செய்து வரும் முகமது ஷமி, சமீபத்தில் டெல்லி அணிக்கு எதிராக நடந்த ரஞ்சி டிரோஃபி போட்டியில் சிறப்பான பௌலிங் திறமையை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதைத் தொடர்ந்து சர்வீசஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் அவர் பிளேயிங் லெவனில் ஆடாதது குறித்து பல சந்தேகங்களும் விவாதங்களும் எழுந்தன.
தற்போது பெங்கால் அணியில் விளையாடி வரும் ஷமி, தனது ஃபிட்னஸ் குறித்த விமர்சனங்களுக்கும் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாக்கம் செய்யப்படுவது குறித்த தனது நம்பிக்கைகளுக்கும் வெளிப்படையான பதிலை அளித்து ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
இந்திய அணிக்குத் திரும்புவது குறித்து முகமது ஷமி பேசும்போது “நான் அணியில் இல்லை, மத்திய ஒப்பந்தத்திலும் (Central Contract) இல்லை. என்னிடம் யார் பேசுவார்கள், ஏன் பேசுவார்கள்? நான் ஏன் நம்பிக்கையை இழக்க வேண்டும்? நம்பிக்கை எப்போதும் இருக்க வேண்டும். எந்தவொரு தொழில் அல்லது விளையாட்டிலும் உங்களுக்கு ஒரு இலக்கு இருக்க வேண்டும். இப்போது, எங்கள் மாநிலத்திற்காக ரஞ்சி டிரோபியை வெல்வதே எங்கள் இலக்கு. இலக்குகள் எப்போதும் இருக்கும், அவை பின்தொடரப்பட வேண்டும். எனக்கு இலக்குகள் இருப்பதை நான் நிச்சயமாக மறுக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து தனது ஃபிட்னஸ் குறித்து பேசிய அவர் “நீங்கள் அனைவரும் என் ஃபிட்னஸைப் பார்க்க முடிகிறது. அனைவரும் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் மைதானத்தில் விளையாட இறங்குகிறேன், நான் விரும்பும் இடத்தில் என்னால் விளையாட முடிகிறது. தொடர்ந்து பௌலிங் செய்வது மட்டுமே எனது வேலை” என்று கூறி இருக்கிறார்.






