வரவிருக்கும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் தொடக்கப் பந்துவீச்சாளராக அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார் செயல்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் புஜாரா ஆதரவு தெரிவித்துள்ளார். நியூசிலாந்து நாட்டின் ஆடுகளச் சூழல் மற்றும் பந்தை ஸ்விங் செய்யும் புவனேஷ்வர் குமாரின் திறமைக்கு இந்தத் தொடர் மிகவும் பொருத்தமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சுழற்பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் புஜாரா மற்றும் அபிஷேக் நாயர் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. புஜாரா வருண் சக்ரவர்த்திக்கு முன்னுரிமை அளிக்கும் நிலையில், அபிஷேக் நாயர் குல்தீப் யாதவ் சிறப்பாகச் செயல்படுவார் என்று கருதுகிறார்.
ஐபிஎல் தொடரில் பிளாட் விக்கெட்களில் பந்துவீசிய அனுபவமும், பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாகப் பந்துவீசியதும் புவனேஷ்வர் குமாருக்குப் பெரும் சாதகமாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்குத் திரும்பியுள்ள அவர் புதிய பந்தில் நியூசிலாந்து பேட்டர்களுக்குக் சவாலாக இருப்பார்.
இதுகுறித்து புஜாரா பேசும்போது “சூழ்நிலைகளின் அடிப்படையில் பந்தை ஸ்விங் செய்யும் திறமை அவரிடம் உள்ளது. நியூசிலாந்தில் பந்து ஸ்விங் ஆகவில்லை என்றால் வேறு எங்கு ஆகும்? அதனால் இந்தச் சூழ்நிலைகள் அவருக்கு ஏற்றதாக இருக்கும். புதிய பந்தில் அவரால் ஆடுகளத்திலிருந்து சிறப்பாகப் பந்தை மூவ் செய்ய முடியும். இதை யாரிடம் கேட்டாலும் நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள்” என்று கூறினார்.
சுழற்பந்துவீச்சு குறித்து அவர் மேலும் பேசும்போது “டி20 போட்டிகளில் நியூசிலாந்து பேட்டர்கள் அனைவரும் வருண் சக்ரவர்த்தியை எதிர்கொண்டதில்லை, அவரிடம் ஒரு மிஸ்ட்ரி உள்ளது. குல்தீப் யாதவ் அழுத்தத்தை அதிகமாக உணர்வார். எல்லைக் கோடுகள் பெரிதாக இருக்கும் மைதானங்களில்தான் அவர் சிறப்பாகப் பந்துவீசுவார்” என்று கூறி முடித்துள்ளார்.






