வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் நடுவே, சர்வதேச கிரிக்கெட்டில் பவுலர்களைப் பாதுகாப்பதற்காகத் தெருக்களில் விளையாடும் கிரிக்கெட் முறையான ‘பேபி ஓவர்’ என்ற கில்லி கிரிக்கெட் கருத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் ஹனுமா விஹாரி யோசனை தெரிவித்துள்ளார்.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் நான்காவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்துள்ள நிலையில், தற்போதைய தட்டையான பிட்ச்களில் பவுலர்கள் படும்பாடு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் 240 ரன்கள் என்பது எளிதாக எட்டப்படும் இலக்காக மாறிவிட்டதால் பவுலர்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் பந்துவீசுவது என்பது மிகவும் உயர் தீவிரமான விஷயம் என்றும், பவுலர்கள் தொடர்ந்து நான்கு ஓவர்கள் வீசுவது அவர்களுக்கு மிகப்பெரிய சுமையாக மாறுகிறது என்றும் அவர் கவலை தெரிவித்தார். குறிப்பாக வைடுகள், நோ-பால்கள் மற்றும் கூடுதல் பந்துகள் வீசும்போது அது பவுலர்களின் உடல்நிலையை மிகவும் பாதிக்கிறது என்று அவர் விளக்கமளித்தார்.
இதுகுறித்து ஹனுமா விஹாரி பேசும்போது “கிரிக்கெட் இப்படித்தான் இருக்க வேண்டுமா? இது பவுலர்களுக்கு நல்லதா? தெருக்களில் நாம் விளையாடும் கிரிக்கெட்டில் மூன்று பந்துகள் கொண்ட ‘பேபி ஓவர்’ என்ற ஒரு கான்செப்ட் இருக்கிறது. இது சர்வதேச கிரிக்கெட்டிலும் கொஞ்சமும் மோசமான யோசனை கிடையாது என்று நான் நினைக்கிறேன். மூன்று பந்துகள் முடிந்த பிறகு, கேப்டனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்: அவர் பவுலரை மாற்ற விரும்பினால் மாற்றிக் கொள்ளலாம். ஏனென்றால் ஒரு பவுலர் தொடர்ந்து ஆறு பந்துகள் வீச வேண்டும் என்றால் அது அவர்களுக்கு பெரிய தலைவலியாக மாறிவிடுகிறது” என்று கூறி இருக்கிறார்.
மேலும் இதுபற்றி தொடர்ந்த அவர் “பேட்டிங் மிகவும் அற்புதமாக இருக்கிறது, திறமையும் அபாரமாக உள்ளது. ஆனால் பவுலர்கள் எங்கே செல்வது? பிட்சுகள் மிகவும் பிளாட்டாக இருப்பதால் பவுலர்கள் நான்கு ஓவர்களில் 40 முதல் 50 ரன்களை வாரிக் கொடுப்பது இப்போது வழக்கமாகிவிட்டது. ஒரு காலத்தில் 160 முதல் 170 ரன்கள் என்பது வெற்றிகரமாக பாதுகாக்கக்கூடிய ஸ்கோராக இருந்தது, ஆனால் இப்போது 240 என்பது புதிய 140 ரன்கள் போல் மாறிவிட்டது. எனவே பவுலர்களுக்கு சற்று லேசான சலுகை வழங்குவது நல்லது என்று நான் ஒரு பேட்டராகவே உணர்கிறேன்” என்று கூறி முடித்துள்ளார்.






