30 நிமிஷம் யாருமே பேசல.. சில பேர் அழுது கொண்டிருந்தனர்.. தோனியின் கடைசி போட்டி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

0
0

2019-ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் இன்னும் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது. 240 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கடைசி நேரத்தில் நம்பிக்கை கொடுத்த தோனி, 49-வது ஓவரில் மார்ட்டின் கப்டில் செய்த ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்தியாவின் வெற்றி வாய்ப்பும் முடிவுக்கு வந்தது. அந்த போட்டிதான் பின்னர் தோனி இந்திய அணிக்காக விளையாடிய கடைசி போட்டியாகவும் மாறியது. அப்போது தோனி ஓய்வு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், அணிக்குள் இருந்த அனைவருக்கும் அது அவரது கடைசி போட்டியாக இருக்கலாம் என்பது அதிகமாகவோ குறைவாகவோ தெரிந்திருந்ததாக முன்னாள் இந்திய களத்தடுப்பு பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர் கூறியுள்ளார்.

அந்த போட்டிக்குப் பிறகு தோனி அழுததாகவும், அவரது கண்களில் இருந்து கண்ணீர் வழிந்ததாகவும் ஸ்ரீதர் கூறியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு தருணத்தை தோனியிடம் பார்ப்பது மிகவும் அரிதானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக இந்திய அணியில் ஒரு மிகப்பெரிய முன்மாதிரியாக இருந்த தோனி அணியை விட்டு விலகினால், டிரெஸ்ஸிங் ரூமில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்படும் என்பதை அப்போது அனைவரும் உணர்ந்திருந்ததாகவும், “அவரிடம் இருக்கும் மன அமைதியை பணம் கொடுத்து வாங்க முடியாது” என்றும் ஸ்ரீதர் கூறியுள்ளார். தோனி அணியில் இருந்து விலகுவது அணிக்கு எவ்வளவு பெரிய மாற்றமாக இருக்கும் என்பதை அந்த நேரத்திலேயே அனைவரும் உணர்ந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதே நேரத்தில், அந்த டிரெஸ்ஸிங் ரூம் சூழல் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்ததாக ஸ்ரீதர் கூறியுள்ளார். “தோனி ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால், அந்த உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருந்திருக்கும். அந்த தொடரில் வெல்லக்கூடிய அணியாக நாங்கள் இருந்தோம். ஆனால் இதுபோன்ற விஷயங்களில் தோனி எந்த ஆர்ப்பாட்டத்தையும் செய்ய மாட்டார். போட்டிக்குப் பிறகு 30 முதல் 35 நிமிடங்கள் டிரெஸ்ஸிங் ரூமில் யாருமே பேசவில்லை. முழுமையான அமைதி நிலவியது. சில வீரர்களும் அழுதுகொண்டிருந்தார்கள்” என்று ஸ்ரீதர் கூறியுள்ளார். மேலும், தோனி அப்போது ஓய்வை அறிவிக்காத நிலையிலும், அவர் இந்திய அணிக்காக தனது கடைசி போட்டியை விளையாடிவிட்டார் என்பது அனைவருக்கும் கிட்டத்தட்ட தெரிந்திருந்ததாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

- Advertisement -