இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி அடைந்த மோசமான தோல்வியைத் தொடர்ந்து, ஏழு வீரர்கள் மற்றும் இரண்டு பயிற்சியாளர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நாடு திரும்ப உத்தரவிட்டுள்ள விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த அதிரடி மற்றும் குழப்பமான முடிவுகள் குறித்து கிரிக்கெட் உலகில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. வீரர்களை நடத்தும் விதம் மற்றும் அணித் தேர்வில் நிலவும் தெளிவற்ற நிலைமை பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
அணி மேலாண்மையின் தவறான அணுகுமுறை காரணமாக வீரர்கள் மிகுந்த பயத்துடனும் அழுத்தத்துடனும் விளையாடும் சூழல் உருவாகி இருப்பதாக முன்னாள் வீரர்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து ஜேசன் கில்லெஸ்பி பேசும்போது “ஆகிப் ஜாவேத் தன்னுடைய முகத்தை முதலில் கண்ணாடியில் பார்க்க வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரி கிறிஸ்டன் மற்றும் என்னை குற்றம் சொல்வதை நிறுத்திவிட்டு அவர் தனக்குத்தானே சுயமாக யோசித்து பார்க்க வேண்டும்.” என்று தொடங்கி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “அணி தேர்வில் அவர்களிடம் எந்த ஒரு தெளிவான ஸ்ட்ரேட்டஜியும் இல்லை. அவர்கள் டிரவுசரை மாற்றுவது போல தினமும் தங்களது முடிவுகளை மாற்றிக் கொள்கிறார்கள். நீக்கப்பட்ட வீரர்கள் தாங்கள் நீக்கப்பட்டதை மீடியாக்கள் மூலமாகவும் தங்களது பேமிலி மற்றும் ஃப்ரண்ட்ஸ் மூலமாகவுமே தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.” என்று கூறி இருக்கிறார்.






