இந்திய அணி அடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரில் மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சு ஃபார்ம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் தனது கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்திய அணி சமீபத்தில் நடந்த சில தொடர்களில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. எனவே வரவிருக்கும் ஆப்கானிஸ்தான் தொடர் இந்திய அணிக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல ஆப்கானிஸ்தான் அணி டி20 பார்மட்டில் மிகவும் ஆபத்தான அணியாக இருப்பதால், அவர்களை சாதாரணமாக எடைபோடக்கூடாது என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
வருண் சக்ரவர்த்தி குறித்து வாசிம் ஜாஃபர் பேசும்போது “வருண் சக்ரவர்த்தி வரவிருக்கும் தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன், ஏனென்றால் சமீபகாலமாக அவருக்கு சில சிக்கல்கள் உள்ளன. எதிரணி பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சை எளிதாக கணித்துவிட்டதாகத் தெரிகிறது. அவரது பெரும்பாலான பந்துகள் பேட்ஸ்மேனை நோக்கி உள்ளேதான் வருகின்றன, வெளியில் செல்வதில்லை. பந்து வீச்சின் எல்லைக்குள் விழும்போது பேட்ஸ்மேன்கள் எந்தத் தயக்கமும் இன்றி ஷாட்களை அடிக்கிறார்கள், எனவே இது அவருக்கு மிக முக்கியமான தொடராக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் “டி20 பார்மட்டில் ஆப்கானிஸ்தான் அணி மிகவும் ஆபத்தானது. இந்திய அணி இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்த வேண்டும், ஆனால் ஆப்கானிஸ்தான் ஒரு போட்டியில் வென்றாலோ அல்லது சவால் அளித்தாலோ ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர்களை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.






