பாகிஸ்தான் கிரிக்கெட் டீமின் தொடர் தோல்விகளுக்கு பாபர் அசாம் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி இடையேயான கேப்டன்ஷிப் மோதலே மிக முக்கியமான காரணம் என்று முன்னாள் வீரர் பாசித் அலி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 194 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் டீம் தோல்வியை தழுவியதை தொடர்ந்து, அந்த நாட்டின் கிரிக்கெட் போர்டு மற்றும் பிளேயர்கள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
கடந்த 2023 உலகக்கோப்பைக்கு பிறகு பாபர் அசாம் கேப்டன் பதவியிலிருந்து விலகியதால் ஷாஹீன் அஃப்ரிடி கேப்டனாக்கப்பட்டார். ஆனால் நியூசிலாந்து தொடர் தோல்விக்கு பிறகு மீண்டும் பாபர் அசாமே கேப்டனாக நியமிக்கப்பட்டதால் இருவருக்கும் இடையே பெரிய விரிசல் ஏற்பட்டது.
தொடர்ந்து கேப்டன்கள் மற்றும் கோச்சுகளை மாற்றிக் கொண்டே இருப்பது பாகிஸ்தான் டீமின் அமைதியையும் பெர்ஃபார்மன்ஸையும் கடுமையாக பாதித்துள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் வீரர் பாசித் அலி பேசும்போது “பாபர் அசாம் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி இடையேயான கேப்டன்ஷிப் சண்டைதான் பாகிஸ்தான் கிரிக்கெட்டை முற்றிலும் சீரழித்துவிட்டது” என்று ஆரம்பித்து “அடிக்கடி கேப்டன்களையும் கோச்சுகளையும் மாற்றுவது டீமிற்குள் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதல் போக்கை உடனடியாக நிறுத்தாவிட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட்டை காப்பாற்ற முடியாது” என்று கூறி இருக்கிறார்.






