லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் மோசமான பேட்டிங் செயல்பாட்டை முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெறும் 110 ரன்களுக்கு சுருண்டு மீண்டும் சொற்ப ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
பாபர் அசாம், அப்துல்லா ஷபிக், ஷான் மசூத் மற்றும் முகமது ரிஸ்வான் போன்ற முன்னணி பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். தொடக்க ஆட்டக்காரர் அஸான் அவாய்ஸ் மட்டுமே ஓரளவுக்கு தாக்குப் பிடித்து 46 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தானின் இந்த மோசமான பேட்டிங் குறித்து மைக்கேல் வாகன் பேசும்போது “நான் மிகவும் நேர்மையாக சொல்கிறேன், இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு பாகிஸ்தான் பேட்டர்கள் எந்தவொரு சவாலையும் அளிக்கவில்லை. சமீப காலத்தில் நான் பார்த்ததிலேயே மிகவும் எளிதாக விக்கெட் வீழ்த்தக்கூடிய பேட்டிங் லைன்-அப் இதுதான். அவர்கள் செகண்ட் டிவிஷன் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுகிறார்களா என்ற சந்தேகம் வருகிறது, இது நிச்சயமாக ஒரு டெஸ்ட் போட்டியின் பேட்டிங் தரமே கிடையாது” என்று கூறி இருக்கிறார்.
மேலும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் குறித்து அவர் பேசும்போது “பாகிஸ்தான் பெரிய ரன்களை எடுக்காது என்பது இங்கிலாந்து பவுலர்களுக்கு நன்றாக தெரியும், அதனால் தான் விக்கெட் எடுக்க அனைவரும் வரிசையில் நிற்கிறார்கள். எந்தவொரு பேட்டரும் தங்களை காயப்படுத்த முடியாது என்பதால் பந்துவீச்சாளர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் பந்துவீசுகிறார்கள்” என்று கூறி முடித்துள்ளார்.






