இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி போட்டியை டிராவில் முடித்து, பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை இலங்கையின் சோனல் தினுஷா வென்றுள்ளார். இந்த போட்டியில் தனது சிறப்பான பேட்டிங் மற்றும் தயாரிப்புகள் குறித்து அவர் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
சர்வதேச போட்டிகளில் குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான விக்கெட்களில் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் பேட்டிங் செய்வது எந்தவொரு வீரருக்கும் மிகப்பெரிய சவாலாகும்.
இதுகுறித்து சோனல் தினுஷா பேசும்போது “எனக்கு உதவிய பயிற்சியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. இந்த கிரவுண்டில் டர்னிங் விக்கெட் இருக்கும் என்பதால் நல்ல குவாலிட்டி செஷன்கள் மூலம் தயாரானேன். டெயில் எண்டர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து எனக்கு ரன்கள் அடிக்க உதவினர். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு என்னால் முடிந்த சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினேன்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 சதங்கள் அடித்தது குறித்து பேசிய தினுஷா “தனிப்பட்ட முறையில் இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போது ரன்கள் அடிப்பதே எனது ஒரே இலக்காக இருந்தது. இறுதியில் அதைச் செய்ததில் மகிழ்ச்சி” என்று கூறி இருக்கிறார்.
மேலும் இந்திய அணிக்கு எதிராக ரன்கள் குவித்தது குறித்து தெரிவித்த தினுஷா “இந்தியா போன்ற ஒரு வலுவான அணிக்கு எதிராக ரன்கள் அடிப்பது ஒரு பிளேயராக எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் மற்றும் பெருமையாகும். மிகவும் அற்புதமாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.






