இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு, இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜுரெல் ஆகிய இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமே இல்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக இந்திய அணி நிர்வாகம் அளவுக்கு அதிகமான ஆல்ரவுண்டர்களை பிளேயிங் லெவனில் சேர்த்து விளையாடி வந்தது. ஆனால் தற்போது துருவ் ஜுரெல் 6-வது இடத்தில் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்டராகக் களமிறங்கி தனது இடத்தை சிறப்பாக உறுதி செய்துள்ளார்.
கொழும்பு டெஸ்டில் ரிஷப் பண்ட் 63 ரன்களும், ஜுரெல் 115 ரன்களும் குவித்து அணிக்கு வலுசேர்த்தனர். இதன்மூலம் 6-வது இடத்தில் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்டர் தேவை என்பது தெளிவாகி உள்ளது.
இந்த விவாதம் குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது “துருவ் ஜுரெல் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யாரை வைத்துக்கொள்வது என்ற கேள்விக்கே இடமில்லை. ஒருவரை மட்டுமே விளையாட வைக்க வேண்டும் என்றால் இந்தியா எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் எனக் கேட்கிறார்கள். ஆனால் நான் கேட்கிறேன், ஏன் ஒருவரை மட்டும் விளையாட வைக்க வேண்டும்? முன்பு நாம் வாஷிங்டன் சுந்தரை 6-வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜாவை 7-வது இடத்திலும், நிதீஷ் குமார் ரெட்டியை 8-வது இடத்திலும் இறக்கினோம். ஆனால் 6-வது இடத்தில் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்டர் தான் தேவை. எனது கணிப்பில் இது விவாதிக்கப்பட வேண்டிய கேள்வியே அல்ல” என்று கூறி இருக்கிறார்.
மேலும் ரிஷப் பண்ட்டின் புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி தொடர்ந்து பேசிய சோப்ரா “துருவ் ஜுரெல் தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருவதால் 6-வது இடத்தில் அவர் ஆடுவது உறுதியாகிவிட்டது. அதேபோல இந்திய விக்கெட் கீப்பர்களில் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர் ரிஷப் பண்ட் தான். டபிள்யூடிசி (WTC) வரலாற்றிலேயே அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். 5-வது இடத்தில் 2,000 ரன்களுக்கு மேல் அடித்த இந்திய பேட்டர்களில் 55-க்கும் அதிகமான ஆவரேஜுடன் அவரே முதலிடத்தில் உள்ளார். எனவே இந்த உரையாடலை இத்துடன் முடித்துக் கொள்வோம். இவர்களிடையே யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் எந்தக் கேள்வியும் இல்லை என்பதை புரிய வைக்கவே இந்த எண்களைக் கூறினேன்” என்று கூறி முடித்துள்ளார்.






