இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது கடுமையான விமர்சனத்தை கடந்த வாரத்தில் முன் வைத்திருந்தார். தற்போது இதற்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் மிகப்பெரிய செல்வாக்கை கொண்டிருக்கும் நேரத்தில், ஐசிசி அமைப்பை தனது கட்டுப்பாட்டில் வைத்து பாகுபாட்டை செய்து வருவதாக நாசர் ஹுசைன் குற்றம் சாட்டியிருந்தார். குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாடாத போது உடனடியாக வேறு இடம் ஒதுக்கப்பட்டதும், அதுவே பங்களாதேஷுக்கு தொடரை விட்டு வெளியேறும் படி நடந்திருப்பது குறித்தும் பேசி இருந்தார்.
2003ல் என்ன நடந்தது?
இதுகுறித்து பதில் அளித்துள்ள கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும்பொழுது “2003 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து கென்யா சென்று விளையாட முடியாது என்று சொன்னது. உடனடியாக அவர்களுக்கு புள்ளி இழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாகவே கென்யா அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அப்போதைய இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன். இப்போது பேசும் அவர் ஏன் அப்போது பேசவில்லை?”
“அப்போது கென்யா தரப்பிலிருந்து அவர்கள் இது நியாயம் இல்லை என்று கூறினார்கள். அப்போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது மட்டும் ஏன் இதைக் குறித்து பேச வேண்டும். இங்கு யாரையும் யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இறுதியில் ஐசிசி அமைப்புக்கு வருமானம் தேவையாக இருக்கிறது. ஆனால் இந்தியாவிடம் இருந்து அதிகபட்ச வருமானம் வருகிறது. எனவே இவர்களுக்கு கொஞ்சம் சலுகை இருக்கும். காலம் காலமாக கிரிக்கெட்டில் இப்படித்தான் நடந்து வருகிறது”
எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது
“பாகிஸ்தான் தற்போது விளையாட சம்மதித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறுவது கிரிக்கெட் உலகத்திற்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் நம்முடைய தென் ஆசிய கண்டத்தில் உள்ள கிரிக்கெட் நாடுகளின் மக்கள் தொகையை மட்டும் பாருங்கள். எவ்வளவு பார்வையாளர்கள் கிடைப்பார்கள் என்று புரியும்”
இதையும் படிங்க: இந்தியாவுடன் உலக கோப்பையில் ஆட மாட்டோம்.. எங்க முடிவால் ஐசிசி நடுநடுங்கி போச்சு – ரஷீத் லத்தீப் பேச்சு
“ஒருவேளை பாகிஸ்தான் இந்திய அணிக்கு எதிராக விளையாடாமல் இருந்தால் பெரிய வருமான இழப்பு ஏற்படும். டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் ஏமாற்றப்படுவார்கள் மேலும் போட்டி நடக்கும் நாடும் வருமான இழப்பால் பாதிக்கப்படும். மேலும் ஐசிசி அமைப்பும் பாதிக்கப்படும். இதனால் பாகிஸ்தான் குறித்து எல்லோருக்கும் எதிர்மறையான எண்ணம் உருவாகும். தற்பொழுது அது தவிர்க்கப்பட்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்






