நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன் டால் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை பாராட்டி பேசி இருக்கிறார். மேலும் விராட் கோலி 45 வயது வரையில் சர்வதேச கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
இந்திய அணி விளையாடிய கடந்த மூன்று ஒருநாள் தொடர்களில் விராட் கோலியின் பேட்டிங் மிக அபாரமாக இருந்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அவர் ஒருநாள் கிரிக்கெட்டை அதிரடியாக அணுகி வருகிறார். இத்துடன் அவரது சிறப்பான விஷயமான சீராக ரன்கள் எடுப்பதையும் தொடர்ந்து செய்து ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
இடம் உறுதி
தற்போது அவர் ஒன்பது சர்வதேச போட்டிகளில் விளையாடி மொத்தம் மூன்று சதங்கள் அடித்து இருக்கிறார். இதில் மூன்று அரை சதங்களும் அடங்கி இருக்கிறது. மேலும் விஜய் ஹசாரே டிராபியில் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்திருக்கிறார்.
இந்த அளவுக்கு அவருடைய பேட்டிங் ஃபார்ம் மிகவும் அபாரமாக இருந்து வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தனி ஒரு வீரராக நின்று சதம் அடித்து அவர் வெற்றிக்கு போராடியது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அவரது சிறப்பான ஃபார்ம் காரணமாக ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அவரது பெயர் எழுதப்பட்டு விட்டது என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
45 வயது வரையில் ஆடணும்
இதுகுறித்து சைமன் டால் பேசும்பொழுது “விராட் கோலி அடித்த சில ஷாட்டுகள் அப்படியே கண் முன்னே இருக்கின்றன. அவை மிகக் கூர்மையாகவும் சுத்தமாகவும் இருந்தன. மிக முக்கியமாக அவர் மைதானம் முழுவதும் எப்படி விளையாடுகிறார் என்பது முக்கியமானது. மேலும் விக்கெட்டுகளுக்கு நடுவில் அவர் வேகமாக ஓடுவது நம்ப முடியாதது. அவரிடம் இன்னும் இளமைச்சாயல் இருக்கிறது. அவரிடம் நல்ல அனுபவம் இருந்தாலும் கூட அவர்தான் இந்திய அணியில் தற்போது மிகவும் உடல் தகுதி கொண்ட வீரராக இருக்கிறார்”
இதையும் படிங்க : அந்த ஒரு பெயருக்குதான் விராட் கோலி இப்படி வேற லெவல்ல பேட்டிங் ஆடிட்டு இருக்காரு – ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து
“ஆட்டத்தை வெல்ல வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்வது, அணி பின்தங்கிய நிலையில் இருக்கும்பொழுது போராடி ஆட்டத்திற்குள் கொண்டு வருவது, தன்னுடைய ரன்னுக்காகவும் அணி வீரர்களின் ரன்னுக்காக ஓயாமல் ஓடுவது, இவையெல்லாம் பாராட்டாமல் இருக்க முடியாது. என்னை பொருத்தவரையில் விராட் கோலி 45 வயது வரையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






