தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அடித்த முதல் சதத்தை தோல்வியில் முடிந்தாலும் கொண்டாட வேண்டும் என்று முன்னாள் இந்திய அணி துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக இருக்கும் ருதுராஜ், தனது இன்னிங்ஸின் போது தலைமைத்துவ குணங்களையும் வெளிப்படுத்தினார் என்று அவர் பாராட்டினார்.
ராய்ப்பூரில் நடந்த போட்டியில் 83 பந்துகளில் 105 ரன்கள் விளாசிய ருதுராஜ், இந்தியாவை 358 என்ற இமாலய இலக்குக்கு அழைத்துச் சென்றார். ஆனால் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட், 4 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி பெற்று தொடரை 1-1 சமன் செய்தது. இது குறித்து பேசிய அபிஷேக் நாயர்“இதை கொண்டாடத்தான் வேண்டும்.”
தோல்விக்குள் வெற்றி:
“ஏனெனில் இது தோல்விக்குள்ளும் ஒரு வெற்றிதான்.ஸ்ரேயஸ் ஐயர் காயம் காரணமாக விலகியதால் நம்பர் 4-ல் வாய்ப்பு கிடைத்தது. அதை சதமாக மாற்றியிருக்கிறார். இது அவரது முதிர்ச்சியையும், தலைமைத்துவ குணத்தையும் காட்டுகிறது. ஐபிஎல்லில் அவர் சிஎஸ்கே அணியை கேப்டன்ஷிப்பில் வழிநடத்துகிறார்.”
“அந்த தலைமைத்துவம் இன்று அவரது பேட்டிங்கில் தெரிந்தது. எல்லா அணிகளின் ரசிகர் குழுக்களும் பல வருஷங்களாக ருதுராஜுக்கு ஏன் வாய்ப்பு தருவதில்லை என்று பேசிக் கொண்டிருப்பார்கள். இன்று அவர் நிரூபித்துவிட்டார். அவர் பெரிய வீரர். பெரிய வீரர்கள் வாய்ப்பு கிடைக்கும்போது ரன்கள் அடிப்பார்கள்.”
கோலியுடன் போட்டி:
“நான் ஒரு சதவீதம் கூட ஆச்சரியப்படவில்லை. அவரது திறமை எல்லோருக்கும் தெரியும். ஒரு புதிய இடத்தில் ஒருபோதும் ஆடாத இடத்தில் சதம் அடித்திருக்கிறார் என்பதுதான் மகிழ்ச்சி. முதல் போட்டியில் அடிக்கவில்லை, இரண்டாவது போட்டியில் சற்று அழுத்தம் இருந்த நிலையில் அடித்திருக்கிறார்.”
இதையும் படிங்க: கோலி கிங், ருதுராஜ் ராஜா.. ஸ்ரேயாஸ் வந்தாலும் தொடர்ந்து வாய்ப்பு கொடுங்க.. அஸ்வின் கோரிக்கை
“இந்த போட்டியில் ரன்கள் அடிக்காவிட்டால் மூன்றாவது போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியாத நிலையில் அடித்திருக்கிறார். அழுத்தத்தில்தான் பெரிய வீரர்கள் உருவாகிறார்கள். விராட் கோலியின் ரன்களோடு போட்டி போடுவது போல ரன்கள் எடுத்தார். போட்டியை முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இளம் வீரர் ஆடுவது போல தெரியவில்லை. 10,12 சதங்கள் அடித்த அனுபவ வீரர் ஆடுவது போல இருந்தது” என்று அபிசேக் நாயர் பாராட்டினார்.






