34 நாளில் 8400 கி.மீ… சொந்த நாட்டில் உலக கோப்பையை நடத்துவதால் இந்திய அணிக்கு வந்த சிக்கல்!

0
1867
ICT

இந்த முறை இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை தனது சொந்த நாட்டில் விளையாடுகிறது. ஆனால் அதனால் எந்தவித நன்மைகளும் இந்திய அணிக்கு பெரிதாக இல்லை!

கடைசியாக ஆஸ்திரேலிய அணியுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோல்வி அடைந்திருந்த இந்திய அணி, இதே மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை தனது முதல் போட்டியில் எதிர்கொள்கிறது!

- Advertisement -

மேலும் பந்து ஸ்விங் ஆவதற்கான தட்பவெப்ப நிலை நிலவும் இமாச்சலப் பிரதேச தர்மசாலா மைதானத்தில், நல்ல ஸ்விங் வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ள நியூசிலாந்து அணியை எதிர்த்து மோதுகிறது.

இது மட்டும் இல்லாமல் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் மொத்தம் பத்து இடங்களில் போட்டிகள் நடைபெற அதில் ஒன்பது இடங்களில் தனது ஒன்பது லீக் ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. மேலும் தனது பயிற்சி ஆட்டங்களில் கௌகாத்தி மற்றும் திருவனந்தபுரம் மைதானங்களில் விளையாடுகிறது. இதனால் மொத்தம் 34 நாட்களில் 8,400 கிலோமீட்டர் இந்திய அணி பயணம் செய்ய வேண்டியதாக இருக்கிறது.

தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து சென்னையில் விளையாடிவிட்டு, தனது அடுத்த போட்டிக்காக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லிக்கு இந்திய அணி செல்கிறது. இது 1761 கிலோமீட்டர் நீண்ட இந்திய உள்நாட்டு பயணம் ஆகும்.

- Advertisement -

இதற்கு அடுத்து மிக அதிக தூர பயணமாக மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பங்களாதேஷ் அணியுடன் விளையாடிவிட்டு அங்கிருந்து நியூசிலாந்து அணி உடன் விளையாட இமாச்சலப் பிரதேஷ் தர்மசாலா செல்கிறது. இதன் தொலைவு 1936 கிலோ மீட்டர். இந்த இரண்டு போட்டிகளுக்கும் இடையே இருக்கும் ஓய்வு நாள் மூன்று நாட்கள் மட்டுமே.

இதற்கு அடுத்து இந்திய அணியின் கடைசி மூன்று போட்டிகளும் இதே போல் மிக கடினமானதாக இருக்கிறது. கொல்கத்தாவில் ஆரம்பித்து மும்பைக்கு போய் இந்திய அணி முடிக்கிறது. இந்த மூன்று போட்டிகளுக்குமான மொத்த பயண தூரம் 3100 கிலோ மீட்டர்.

தனது சொந்த நாட்டில் உலகக் கோப்பை நடைபெற்றாலும், ஒரே மைதானத்தில் குறைந்தபட்சம் இரண்டு போட்டிகளில் கூட விளையாடாமல், அதே சமயத்தில் ஒரு போட்டியிலிருந்து மற்றொரு போட்டிக்கு அதிக தூரம் பயணம் செய்து இந்திய அணி விளையாடுகிறது. இது நிச்சயம் ஒரு பின்னடைவுதான். இங்கு வரும் மற்ற அணிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு மைதானத்தில் இரண்டு போட்டிகள் ஆவது கிடைக்கிறது. இது அவர்களுக்கு இரண்டாவது போட்டியையாவது எளிதாக்கும்.