இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவது என முடிவு செய்தது. கடந்த போட்டியில் செய்த தவறை செய்யவில்லை. இந்திய அணியில் ஸ்ரேயாஸ் வெளியில் போக, ரிங்கு சிங் தனது முதல் வாய்ப்பை பெற்றார்.
இந்த நிலையில் துவக்க ஆட்டக்காரராக வந்த ருதுராஜ் இரண்டு பந்தில் நான்கு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்தப் போட்டியிலும் தொடர்ச்சியாக தனது இரண்டாவது அரைசதத்தை சாய் சுதர்சன் பதிவு செய்து 83 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இவருக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டன் கேஎல்.ராகுல் மட்டுமே சுதாரித்து விளையாடி 64 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். திலக் வர்மா 10, சஞ்சு சாம்சன் 12, ரிங்கு சிங் 17, அக்சர் படேல் 7 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். அர்ஸ்தீப் சிங் கடைசி கட்டத்தில் 17 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
இறுதியாக இந்திய அணி 46.2 ஓவரில் 211 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் பர்கர் மூன்று விக்கெட், கேசவ் மகாராஜ் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ரீசா ஹென்றிக்ஸ் மற்றும் டோனி டி டோர்சி ஜோடி முதல் விக்கட்டுக்கு 130 ரன்கள் சேர்த்தது. ரீசா ஹென்றிக்ஸ் 81 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் நடந்தார். வான்டர் டேசன் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இன்னொரு துவக்க ஆட்டக்காரர் டோனி டி டோர்சி மிகச் சிறப்பாக விளையாடி 122 பந்துகளில் 119 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமலும், கேப்டன் மார்க்ரம் இரண்டு ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்க, தென் ஆப்பிரிக்க அணி 42.3 ஓவர்களில் இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய தரப்பில் இன்று திலக் வர்மா, ரிங்கு சிங் மற்றும் சாய் சுதர்சன் என மொத்தம் 8 பந்துவீச்சாளர்கள் பந்துவீசினார்கள். இதில் அர்ஸ்தீப் சிங் மற்றும் ரிங்கு சிங் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் 1-1 என தற்போது சமநிலையில் இருக்கிறது. கடைசி போட்டி நாளை மறுநாள் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது!