ஐபிஎல் தொடர் பல இளம் இந்திய வீரர்களுக்கு பெரிய மேடைகளை அமைத்துக் கொடுக்கும் களமாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் ஐபிஎல் தொடர்மில் இருந்த எல்லா விமர்சனங்களும் தற்காலத்தில் தகர்ந்து போய் இருக்கிறது. டிவால்ட் பிரிவியஸ் போன்ற வெளிநாட்டு இளம் வீரர்களுக்கும் பெரிய மேடையாக அமைந்திருக்கிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் மாதத்தில் 17 ஆவது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் குறிப்பிடத்தக்க வகையில் நான்கு இளம் இந்திய உள்நாட்டு வீரர்கள் விலை போனார்கள்.
இதில் ஜார்க்கண்ட் அணிக்கு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக இருந்து வரும் குமார் குஷ்கரா 7.20 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு வாங்கப்பட்டது பெரிய செய்தியாக மாறி இருந்தது.
இவரிடம் மகேந்திர சிங் தோனியிடம் இருக்கும் சில விஷயங்களை பார்ப்பதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் பயிற்சியாளர் கங்குலி தெரிவித்திருந்தார். மேலும் ஏலத்திற்கு முன்பான பயிற்சி முகாமில் இந்த வீரரை வாங்குவதாக வாக்குறுதி கொடுத்தும் வாங்கி இருந்தார்.
தற்பொழுது குமார் குஷ்கரா இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற இருக்கும் நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இந்திய ஏ அணிக்கு தேர்வாகி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இந்திய ஏ அணிக்கு விளையாடுவது என்பது சிறப்பு வாய்ந்தது. என்னுடைய கவனம் எப்பொழுதும் சிவப்புப்பந்து கிரிக்கெட்டில்தான் இருந்தது. ஐபிஎல் தொடருக்காக எனது ஆட்டத்தை மாற்றுவதை விட, நீண்ட கிரிக்கெட் வடிவத்தில் விளையாடுவதற்காக, எனது திறமையை மேம்படுத்துவதே எனது நோக்கம்.
நான் இன்னும் என்னை ஒரு நீண்ட வடிவ டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வீரராக மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறேன். நான் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய சவால் மிகுந்த இடங்களில் விளையாட விரும்புகிறேன். அதற்காக தகுதிப்படுத்திக் கொள்ள நான் வேலை செய்கிறேன்.
இன்று திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கு இந்த சிறுவயதில் ஐபிஎல் ஒரு நல்ல வாய்ப்பு. ஆனால் எனது கவனம் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் மட்டுமே இருக்கும். அணியில் பல பெரிய வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் மேலும் கற்றுக் கொண்டு எனது ஆட்டத்தை மேம்படுத்த முயற்சி செய்வேன்” என்று கூறியிருக்கிறார்.