6 பந்து 10 ரன்.. திரில் போட்டியில் ஆஸியை அடக்கிய அர்ஸ்தீப்.. இந்தியா தொடரை வென்று அசத்தல்!

0
7789
ICT

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் ஐந்தாவது போட்டி, இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியிலும் இந்திய அணி டாஸ் தோற்றது. ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பனிப்பொழிவின் காரணமாக முதலில் பந்து வீசுவது என முடிவு செய்தது.

- Advertisement -

இந்த தொடரில் முதல்முறையாக இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் 21, ருதுராஜ் 10 இருவருமே ஒரு சேர ஏமாற்றம் தந்தார்கள். சூரியகுமார் யாதவ் 5, ரிங்கு சிங் 6 என அடுத்தடுத்து இந்திய அணிக்கு விழுந்தது.

இந்த நிலையில் மூன்றாவது வீரராக வந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு முனையில் நின்று விளையாட, அதிரடியாக விளையாட நினைத்த ஜிதேஷ் சர்மா 16 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த அக்சர் படேல் ஸ்ரேயாஸ் ஐயர் உடன் இணைந்து பொறுப்பாக விளையாடி 21 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மெதுவான ஆடுகளத்தின் தன்மை உணர்ந்து விளையாடிய ஸ்ரேயாஸ் 37 பந்துகள் சந்தித்து 53 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. பெஹரென்டாப் மற்றும் த்வார்சூஸ் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட் 28, ஜோஸ் பிலிப்பி 4, ஹார்டி 6, டிம் டேவிட் 17, மெக் டோர்னமெட் 54, மேத்யூ ஷார்ட் 16, த்வார்சூஸ் 0 என வெளியேற ஆட்டம் இந்தியா பக்கம் வந்து பரபரப்பானது.

கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட பொழுது, களத்தில் ஆஸ்திரேலியா கேப்டன் மாத்யூ வேட் மற்றும் நாதன் எல்லீஸ் இருந்தார்கள். 19ஆவது ஓவரை வீசிய முகேஷ் குமார் 7 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

இந்த நிலையில் அர்ஸ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. மேத்யூ வேட்க்கு முதல் இரண்டு பந்துகளை டாட் பந்துகளாக வீச, மூன்றாவது பந்தில் நேராக ஸ்ரேயாஸ் ஐயரிடம் அடித்து கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்த மூன்று பந்துகளில் அர்ஸ்தீப் சிங் மூன்று ரன்கள் மட்டுமே கொடுக்க, பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது. இந்திய அணியின் தரப்பில் முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகள், அர்ஸ்தீப் சிங் மற்றும் ரவி பிஸ்னாய் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். அக்சர் படேல் நான்கு ஓவர் பந்து வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுத் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.