கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

வினோதமான காரணங்களால் உலகக் கோப்பையில் விளையாட முடியாமல் போன 5 துரதிர்ஷ்டசாலி வீரர்கள்!

எட்டாவது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 22ஆம் தேதி ஆரம்பித்து நவம்பர் 13ஆம் தேதி வரையில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கிறது. பிரதான சுற்றில் 12 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டு, அதிலிருந்து இறுதிப் போட்டிக்கு இரண்டு அணிகள் முன்னேறும். அதிலிருந்து சாம்பியன் அணி தேர்வாகும்!

- Advertisement -

இப்படியான உலகக்கோப்பை தொடரை வினோதமான காரணங்களால் தவறவிட்ட 5 துரதிஷ்டசாலி வீரர்களை பற்றித்தான் நாம் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.

சிம்ரன் ஹெட்மையர் வெஸ்ட் இண்டீஸ் :

உலகக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியா சென்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது விளையாடி வருகிறது. தனிப்பட்ட காரணங்களால் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் சிம்ரன் ஹெட்மையரால் இணைந்து கொள்ள முடியவில்லை. மேலும் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்க, அவருக்கு அவகாசம் தரப்பட்டு வேறொரு நாளில் பயணச்சீட்டு பதிவு செய்யப்படுகிறது. அவர் அப்போதும் விமானத்தை தவற விட, வெறுப்பான வெஸ்ட் இண்டீஸ் கிரிகெட் போர்டு அவரை டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து அதிரடியாக நீக்கி இருக்கிறது.

- Advertisement -

ரவீந்திர ஜடேஜா இந்தியா:

சாகசங்களில் விருப்பம் கொண்ட ஜடேஜா அலைச்சறுக்கு விளையாடும் பொழுது தவறி கால் முட்டியில் காயம் அடைகிறார். இந்த காயம் அவரை பல மாதங்களாக துன்புறுத்தி வந்தது. ஆசியக் கோப்பையின் போது காயத்தின் தீவிரம் அதிகரிக்க ரவீந்திர ஜடேஜா தற்போது அதற்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். இதனால் அவர் இந்த டி20 உலகக் கோப்பையையும் தவற விட்டிருக்கிறார்.

டெவோன் கான்வோ நியூசிலாந்து :

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையின் போது ஒரு முக்கியமான ஆட்டத்தில் முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்து, அந்த விரக்தியை கையால் பேட்டில் குத்தி வெளிப்படுத்துவார் இவர். பிறகு அப்படி குத்தியதால் விரல் உடைந்து, கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் மீதியிருந்த ஆட்டங்களை இவர் தவறவிட்டார்.

ஜானி பேர்ஸ்டோ இங்கிலாந்து :

இந்த ஆண்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அதிஉச்ச பேட்டிங் ஃபார்மில் இருந்தார் இந்த வீரர். டெஸ்ட் போட்டிகளை கூட டி20 போட்டிகள் போல அதிரடியாக விளையாடினார். தென்ஆப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடருக்கு முன்பாக கிடைத்த ஓய்வில் கோல்ப் விளையாட சென்ற இவர் காயம் அடைந்தார். காயத்தை பரிசோதித்துப் பார்த்த பொழுது இவரால் மேற்கொண்டு மூன்று மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது என்ற அதிர்ச்சி தகவல் வந்தது. வேதனையோடு இந்த டி20 உலக கோப்பை தொடரை இவர் இழந்திருக்கிறார்!

ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து :

வெஸ்ட் இண்டீஸில் பிறந்து இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடி இங்கிலாந்து அணியில் இடம்பிடித்து தற்போது எல்போ காயத்தால் கிரிக்கெட்டுக்கு வெளியில் இருக்கிறார். ஆனால் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை இவர் தனது வீட்டு மீன் தொட்டியை சுத்தம் செய்ய போய் அதை தவறி உடைத்து காயமடைந்து தவறவிட்டார்.

Published by