டாப் 10

டி20 உலகக்கோப்பையில் ஒன்றாக ஆடிய 5 சகோதர ஜோடிகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள், தேசிய அணியில் ஒன்றாக ஆடுவதைப் பல முறை நாம் பார்த்திருக்கிறோம். உதாரணமாக பாண்டியா சகோதரர்கள், வாஹ்க் சகோதரர்கள், பிளவர் சகோதரர்கள். ஒரு வீரர் தேசிய அணியில் அறிமுகமாவதை விட உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவது தான் சவாலான விஷயம். அவ்வளவு பெரிதாக எனப்படும் உலகக்கோப்பையில், சகோதரர்கள் இருவர் ஒன்றாக ஆடுவது அரிதான ஒன்றுதான். டி20 உலகக்கோப்பைத் தொடரில் ஆடிய உடன்பிறப்புகளைப் பற்றி இக்கட்டுரையில் பின்வருமாறு பார்ப்போம்.

- Advertisement -

யூசுப் பதான் மற்றும் இர்பான் பதான் – 2007 & 2009

இந்திய அணிக்காக விளையாடிய பிரபல சகோதரர்களிள் இவர்களும் அடங்குவர். இரண்டு முறை ( 2007 & 2009 ) இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ளனர். 2007 தொடர் இருவருக்கும் ஸ்பெசல். 2007 டி20 உலகக்கோப்பையில் தான் யூசுப் அறிமுகமாகினார். இர்பான் பதான் அத்தொடரில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அற்புதம் செய்தார். அதற்கு அடுத்த உலகக்கோப்பையிலும் இந்த ஜோடி கலந்துகொண்டது. ஆனால் யூசுப் பதானிற்கு அத்தொடாரில் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் நாதன் மெக்கல்லம் – 2007, 2009, 2010, 2012 & 2014

மெக்கல்லம் பிரதர்ஸ், நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். பிரெண்டன் மெக்கல்லம் 2000+ ரன்கள் அடித்துள்ளார். மேலும், 2012ஆம் ஆண்டு 58 பந்துகளில் 123 ரன்கள் விளாசினார். டி20 உலகக் கோப்பையில் இது தான் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் ஆகும். நாதன் மெக்கல்லமும் தன் சகோதரரைப் போல சிறப்பாக செயல்பட்டார். இவர் பவுலிங்கில் 50+ விக்கெட்டுகள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடி 2007 முதல் 2014 வரை நடந்த டி20 உலகக்கோப்பையில் ஆடியது. பிரெண்டன் மெக்கல்லம் 2016 தொடருக்கு முன்னாள் ஓய்வுப் பெற்றுவிட்டார். ஆனால் நாதன் மெக்கல்லம் தொடர்ந்து ஆடினார்.

டுவெயின் பிராவோ மற்றும் டேரன் பிராவோ – 2012

இந்த இருவரும் 2012 டி20 உலகக்கோப்பையில் ஒன்றாக ஆடினார். இத்தொடரில் டேரன் பிராவோவுக்கு ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் வாய்ப்புக் கிடைத்தது. டி20யில் அவர் பெரிதாக ஜொலிக்கவில்லை என்பது தான் உண்மை. டுவெயின் பிராவோ, வெஸ்ட் இண்டீஸ்க்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர். ( 2012 & 2014 ) இரண்டு முறை கோப்பை வென்ற அணியிலும் டுவெயின் பிராவோ இடம்பெற்றிருந்தார்.

- Advertisement -

ஆல்பி மார்க்கல் மற்றும் மார்னே மார்க்கல் – 2007, 2009, 2010, 2012 & 2014

மெக்கல்லம் பிரதர்ஸைப் போல இவர்களும் தொடர்ந்து ஐந்து உலகக்கோப்பைகள் ஒன்றாக ஆடினர். 2016 வரை இருவரும் தென்னாபிரிக்காவின் முக்கிய அங்கமாக விளங்கினர். மார்னே மார்க்கல் அனைத்து ஃபார்மட்டிலும் நன்றாக ஆடினார். ஆனால் ஆல்பி மார்க்கல் டி20யில் மட்டுமே பங்களித்தார். மேலும், டி20 உலகக்கோப்பையில் அவர் எதிர்பார்த்த அளவிற்கு ரன்களை சேர்க்கவில்லை. மறுமுனையில் மார்னே மார்க்கல், தன்னுடைய துறையில் சிறப்பித்து 24 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

டேவிட் ஹசி மற்றும் மைக்கல் ஹசி – 2009, 2010 & 2012

இப்பட்டியலில் இருக்கும் கடைசி சகோதரர்கள் டேவிட் ஹசி மற்றும் மைக் ஹசி ஆவார். டேவிட் ஹசி, டி20 ஸ்பெசலிஸ்ட். மேலும், தன் மூத்த சகோதரனை விட அதிக டி20 போட்டிகள் ஆடியுள்ளார். பேட்டிங்கில் இருவரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. எனினும் 2010ல் ஆல்ரவுண்டர் டேவிட் ஹசி பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளும் பேட்டிங்கில் இரு அரை சதமும் விளாசினார். இவர்கள் இரண்டு பேரும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by