உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று 13வது உலகக் கோப்பை தொடர் துவங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன!
இந்த உலகக் கோப்பையில் மிகவும் பலமான அணியாக பல கிரிக்கெட் வல்லுனர்களாலும் இங்கிலாந்து அணி கணிக்கப்பட்டிருந்தது. மேலும் இறுதிப் போட்டிக்கு கட்டாயம் செல்லும் அணியாகவும், உலகக் கோப்பையை வெல்லும் அணியாகவும் பலர் இங்கிலாந்து அணியை தேர்ந்தெடுத்து இருந்தார்கள்.
இங்கிலாந்து அணியும் கணிப்புகளுக்கு ஏற்ற வகையில் நிறைய ஆல்ரவுண்டர்களை கொண்டும், அதிரடியான பேட்ஸ்மேன்களைக் கொண்டும், நீண்ட பேட்டிங் லைன்அப்பை வைத்து பயமுறுத்தக்கூடிய அணியாகவே இருந்தது.
மேலும் இங்கிலாந்து பயமற்ற அதிரடியான பேட்டிங் அணுகுமுறையை கொண்ட அணியாக கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு போட்டியில் சிறு வாய்ப்பு கிடைத்தாலும், எதிரணி மனசோர்வு அடையும் வகையில் அதிரடியாக விளையாடக் கூடியவர்களாக இருந்தார்கள்.
இப்படிப்பட்ட பிம்பத்துடன் இந்த உலகக் கோப்பையின் முதல் போட்டியில் சாதாரணமாக கணிக்கப்பட்ட நியூசிலாந்து அணிக்கு எதிராக, முதலில் பேட்டிங் செய்து 282 ரன்கள் மட்டுமே எடுத்து, 36.2 ஓவர்களில் 283 ரன்கள் கொடுத்து இங்கிலாந்து தோல்வி அடைந்தது, பலருக்கும் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
இந்தப் போட்டியில் இரண்டாவது விக்கெட்டுக்கு டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்தரா இருவரும் ஆட்டம் இழக்காமல் 273 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைப்பு அசத்தினார்கள். வெற்றிகரமான ரன் துரத்தலின் போது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்னாக உலகக்கோப்பையில் உலகச்சாதனையாகப் பதிவாகி இருக்கிறது.
மேலும் ரன் துரத்தலின் போது எந்த ஒரு அணியும் உலகக் கோப்பையில் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைவதற்கு விட்டதே கிடையாது. அதாவது சிறிய நாடுகள் கூட பந்துவீச்சில் 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைவதற்கு விட்டது கிடையாது. ஆனால் மிகப்பெரிய அணியான இங்கிலாந்து இதை விட்டிருக்கிறது.
மேலும் ரன் துரத்தலில் மூன்று முறை 200 ரன்களுக்கும் அதிகமான பார்ட்னர்ஷிப்பை உலகக்கோப்பையில் இங்கிலாந்து விட்டு இருக்கிறது. இந்த வகையில் இங்கிலாந்துக்கு இது மோசமான சாதனையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் பதிவாகி இருக்கிறது.
தில்ஷான் – தரங்கா – இலங்கை – 2011
சங்கக்கரா – திரிமனே – இலங்கை – 2015
கான்வே – ரவீந்தரா – நியூசிலாந்து – 2023