428 ரன்கள்.. 3 சதங்கள்.. உலக கோப்பை வரலாற்றில் 3 புதிய உலக சாதனைகள்.. இலங்கையை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!

0
1821
Markram

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் மூன்றாவது நாளில் நான்காவது போட்டியில், டெல்லி மைதானத்தில், இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த முடிவை எடுத்ததற்காக இலங்கை அணி 50 ஓவர்கள் முடிந்த பொழுது மிகப்பெரிய வருத்தப்பட்டிருக்கும்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த கேப்டன் டெம்பா பவுமா ஐந்து பந்துகளில் எட்டு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து ஆரம்பித்தது இலங்கைக்கு தலைவலி.

இதன்பின் ஜோடி சேர்ந்த குயின்டன் டிகாக் மற்றும் ராசி வான்டர் டேசன் இருவரும் சேர்ந்து இலங்கை பந்துவீச்சை மைதானம் எங்கும் சிதறடித்தார்கள். சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்து சதமும் அடித்தார்கள்.

இந்த ஜோடி 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. குயின்டன் டி காக் 100 (84), ராசி வான்டர் டேசன் 108 (110) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஆனால் இங்கிருந்து மீண்டும் இலங்கையின் தலைவலி பெரிதாக மாற ஆரம்பித்தது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு நான்காவது வீரராக வந்த எய்டன் மார்க்ரம் சதம் அடித்த மற்ற இரண்டு வீரர்களை விட மிக வேகமான அதிரடியில் ஈடுபட்டார். அவரை இலங்கையின் பந்துவீச்சாளர்களால் தடுத்து நிறுத்தவே முடியவில்லை. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 49 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் உடன் சதம் அடித்து அசத்தினார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே அணியை சேர்ந்த வீரர்கள் ஒரு போட்டியில் மூன்று பேர் சதம் அடித்தது இதுவே முதல் முறையாகும். இந்த வகையில் இது உலகக்கோப்பை உலகச் சாதனையாக பதிவாகி இருக்கிறது.

இதற்கு அடுத்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் 49 பந்துகளில் அடிக்கப்பட்ட இந்த சதமே அதிவேக சதமாக பதிவாகி இருக்கிறது. 2011 ஆம் ஆண்டு கெவின் ஓ பிரைன் இங்கிலாந்து அணிக்கு எதிராக 50 பந்திலும், 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக மேக்ஸ்வெல் 51 பந்திலும் சதம் அடித்திருந்தார்கள். இந்த வகையில் இதுவும் உலகக்கோப்பை உலக சாதனையாக பதிவாகி இருக்கிறது.

இதற்கிடையில் ஹென்றி கிளாசன் 20 பந்துகளில் 32 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக விளையாடி சதம் அடித்த எய்டன் மார்க்ரம் 106 (54) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவர்களுக்கு அடுத்து டேவிட் மில்லர் 39* (21), யான்சன் 12* (7) ரன்கள் எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் குவித்தது.

ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன் இதுவாக உலகச் சாதனையாகப் பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்பு 2015ஆம் ஆண்டு 417 ரன்கள் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய குவித்ததே உலகக் கோப்பை உலக சாதனையாக இருந்தது.

மேலும் இலங்கைக்கு எதிரான தென் ஆப்பிரிக்காவின் இந்த ஒரு போட்டியில் மட்டும் மூன்று உலகக்கோப்பை உலகச்சாதனைகள் முறியடிக்கப்பட்டு, மூன்று புதிய உலகக்கோப்பை உலகச்சாதனைகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!