3நாட்கள் 4சதங்கள் 946ரன்கள்.. கேதார் ஜாதவ் ருத்ர தாண்டவம்.. மகாராஷ்டிரா ஜார்க்கண்ட் ரஞ்சி போட்டி

0
496
Kedar

இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி கடந்த வாரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் பங்குபெறும் 38 அணிகளுக்கும் மொத்தம் 19 போட்டிகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டன. தற்பொழுது மீண்டும் 38 அணிகளும் தங்களது இரண்டாவது போட்டியில் விளையாடுகின்றன.

- Advertisement -

இதில் ஒரு போட்டியில் எலிட் பிரிவில் இடம் பெற்று இருக்கும் ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற ஜார்கண்ட் அணி பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. ஜார்க்கண்ட் அணியை விராட் சிங் கேப்டனாக இருந்து வழி நடத்துகிறார்.

- Advertisement -

ஜார்க்கண்ட் அணிக்கு முதல் இன்னிங்ஸில் கேப்டன் விராட் சிங் 171 பந்துகளில் 108 ரன்கள், குமார் சுராஜ் 156 பந்துகளில் 83 ரன்கள், ஷாபாஷ் நதீம் 41 ரன்கள் எடுக்க, ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்ஸில் 126.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 403 ரன்கள் குவித்தது.

ரஞ்சி டிராபியை பொருத்தவரை போட்டி டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்ஸ் யார் அதிக ரன்கள் எடுத்திருக்கிறார்களோ அவர்களுக்கு புள்ளிகள் கூடுதலாக வழங்கப்படும். எனவே ஜார்க்கண்ட் அணியை விட ஒரு ரன் கூடுதலாக எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மகாராஷ்டிரா அணி களம் இறங்கியது.

மகாராஷ்டிரா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பவன் ஷா 225 பந்துகளில் 136 ரன்கள், மிடில் ஆர்டர் அன்கித் பாவ்னி 186 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார்கள். இவர்களை பேட்டிங்கில் வழி நடத்தும் விதமாக கேப்டன் கேதார் ஜாதவ் அதிரடியாக 216 பந்துகளில் 21 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உடன் 182 ரன்கள் குவித்து அசத்தினார்.

மூன்றாம் நாள் முடிவின் பொழுது மகாராஷ்டிரா அணி நான்கு விக்கெட் மட்டும் இழந்து 543 ரன்கள் எடுத்திருக்கிறது. மொத்தமாக இரண்டு அணிகளிலும் சேர்த்து நான்கு சதங்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மூன்று நாட்களில் இரு அணிகளும் சேர்ந்து 946 ரன்கள் குவித்து இருக்கின்றன.

ஜார்க்கண்ட் அணியை விட தற்பொழுது மகாராஷ்டிரா அணி சிறப்பாக விளையாடி முன்னிலை பெற்று இருக்கிறது. மேலும் நாளையும் முடிந்த வரையில் மகாராஷ்டிரா பேட்டிங் செய்து, அதன் மூலம் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடாமலே ஜார்க்கண்ட் அணிக்கு இலக்கை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -