2024 டி20 உலக கோப்பை.. தென் ஆப்பிரிக்க அணிக்கு திரும்பும் நட்சத்திர வீரர்.. அதிரடி அறிக்கை!

0
3514
Devilliers

தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை ஐசிசி தொடர்களை சர்வதேச மட்டத்தில் வென்றது கிடையாது. ஆனால் அவர்கள் எப்பொழுதுமே ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் அணியாக இருந்து வந்திருக்கிறார்கள். எந்த ஒரு பகுதியிலும் அவர்கள் பலவீனமானவர்கள் என்று கூற முடியாது.

கடைசியாக ஏபி டிவில்லியர்ஸ், டேல் ஸ்டெயின், பிலாந்தர், மோர்னி மோர்கல், அசிம் அம்லா, பாப் டு பிளிசிஸ் என உலகத் தரமான வீரர்களைக் கொண்டு தென் ஆப்பிரிக்கா அணி உலகக் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக இயங்கி வந்தது.

- Advertisement -

அதே சமயத்தில் இந்த வீரர்கள் அனைவரும் ஒரே காலக்கட்டத்தில் ஓய்வு பெற்றார்கள். இது வலிமையான தென் ஆப்பிரிக்க அணியை புரட்டி போட்டு விட்டது என்று கூறலாம். தற்பொழுது அதிலிருந்து மீண்டு வருவதற்கான வேலைகளை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த நிலையில் தற்பொழுது இந்திய அணிக்கு எதிராக மூன்று வடிவ தொடர்களுக்கும் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்ததோடு, டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு மட்டும் டெம்பா பவுமாவை கேப்டனாக விட்டு, வெள்ளைப் பந்து வடிவத்திற்கு எய்டன் மார்க்ரம்மை கேப்டனாக தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில் அடுத்த வருடம் ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம் குறிவைத்து இயங்க ஆரம்பித்திருக்கிறது. அவர்கள் இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கு வாய்ப்பளித்த வீரர்களை பார்க்கும் பொழுது இது தெளிவாக தெரிகிறது.

- Advertisement -

தற்பொழுது அதிரடியாக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் வீரரான பாப் டு பிளிசிஸ் டி20 உலக கோப்பைக்கு தென் ஆப்பிரிக்க அணிக்கு திரும்புவதாக ஒரு கருத்தைக் கூறி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “என்னால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்ப முடியும் என்று நான் நம்புகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் நான் இதை பேசி வருகிறோம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் சமநிலையை கண்டுபிடிப்பதற்காக, புதிய பயிற்சியாளருடன் இணைந்து இதுகுறித்து பேசி வருகிறோம்.

நாம் விரும்பும் இந்த அற்புதமான விளையாட்டு தொடர்ந்து விளையாடுவதற்கு எனது உடலை நான் கவனித்துக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும் உடலை உறுதியாக வைத்துக் கொண்டால் மட்டுமே விளையாட முடியும். தொடை எலும்புகள் மற்றும் உடலில் சில பகுதிகள் பலவீனமடைந்து விட்டால் சிறப்பாக செயல்பட முடியாது. எனவே என்னுடைய கவனம் இதில் இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!