2023 ஐபிஎல்; காயமடைந்து தொடரிலிருந்து வெளியேறிய மொத்த வீரர்கள் லிஸ்ட்!

0
208
IPL2023

உலகின் நம்பர் 1 ப்ரான்சிசைஸ் டி20 கிரிக்கெட் லீக்கான இந்திய கிரிக்கெட் வாரியம் 15 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர், இந்த ஆண்டு 16ஆவது சீசனாக இந்த மாதம் இறுதியில் மார்ச் 31ஆம் தேதி துவங்கி மே 28ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது!

கடந்த வருட ஐபிஎல் தொடர் மெகா ஏலத்துடன் நடைபெற, இந்த வருடம் நடைபெற்ற மினி ஏலத்தில், 10 அணிகளும் தங்கள் அணிக்கு தேவைப்பட்ட சிறிய மாற்றங்களுக்கு புதிய சில வீரர்களை வாங்கி தங்களை வலிமையாக்கி கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

இப்படி மினி ஏலத்தின் மூலம் அணிகள் தங்கள் குறைகளை சரி செய்து ஒருபுறம் வலிமையாக்கி கொண்ட போதும், வீரர்களின் எதிர்பாராத காயங்கள் அணிகளுக்கு எதிர்ப்பாராத பின்னடைவுகளைத் தற்போது வந்திருக்கிறது.

இதில் மிகப்பெரிய பின்னடைவை மும்பை இந்தியன்ஸ் அணி சந்தித்திருக்கிறது. அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயத்தால் இல்லாத நிலையில், வெளிநாட்டு வீரரான மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜைலி ரிச்சர்ட்சன் காயத்தால் தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் எதிர்பாராத சாலை விபத்தின் காரணமாக இந்த முறை ஐபிஎல் தொடரை தவற விடுகிறார். பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனுமான இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜானி பேர்ஸ்டோ கடந்த ஆண்டின் இறுதியில் கோல்ப் விளையாடி அடைந்த காயத்திலிருந்து தற்பொழுது வரை மீளவில்லை அவரும் தொடரை இழக்கிறார்.

- Advertisement -

இந்த வருடம் மினி ஏலத்தில் 3.6 கோடிக்கு ஆர்சிபி அணி இங்கிலாந்தின் இளம் அதிரடி வீரர் வில் ஜேக்சை வாங்கி இருந்தது. குறைகளை சரி செய்ய வாங்கப்பட்ட வீரரே தற்பொழுது காயத்தால் தொடரிலிருந்து வெளியேறியது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பின்னடைவாக அமைகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு மினி ஏலத்தில் வாங்கிய வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிரதான இந்திய வேகப்பந்துவீச்சாளரான பிரசித் கிருஷ்ணா இருவரும் காயத்தால் தொடரிலிருந்து விலகி இருக்கிறார்கள்.

இந்த வருட ஐபிஎல் தொடரில் காயத்தால் விளையாட வாய்ப்பு குறைந்து வரும் வீரர்களாக சென்னை அணியின் முகேஷ் சௌத்ரி, லக்னோ அணியின் மோசின் கான் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஆகியோர் இருக்கிறார்கள். இந்த வருட ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இரண்டு அணிகள் மட்டுமே காயத்திலிருந்து தப்பி இருக்கின்றன!