2023 கேப்டன் ரோகித் மாஸ் ரெக்கார்ட்.. சச்சின் கோலி எலைட் லிஸ்டில் அதிரடியான இடம்.. உலகக் கோப்பையில் மேலும் சில சாதனை!

0
381
Rohit

நடப்பு 13வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று லக்னோ மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

அணிகளும் கடந்த போட்டியில் விளையாடிய அதே அணிகளுடன் களம் இறங்கி இருக்கின்றன. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

இந்த ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருக்கின்ற காரணத்தினால் பேட்டிங் செய்வதற்கு சற்று சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் பவர் பிளேவில் இந்திய அணி முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை கில் மற்றும் விராட் கோலி இருவரையும் இழந்தது.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த ஸ்ரேயாஸ் ஐயர் வழக்கம் போல் ஷாட் பந்துக்கு தேவையில்லாமல் விளையாடி தனது விக்கட்டை பறிகொடுத்து இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்றினார்.

இப்படி விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்து கொண்டிருக்க இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அவருடைய அதிரடியான பாணியில் வழக்கம் போல விளையாட ஆரம்பித்தார். இவருடன் ஜோடி சேர்ந்த கே எல் ராகுலும் தன்னுடைய பொறுப்பான அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இந்த நிலையில் மிகச் சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் அரை சதம் அடித்து அசத்தினார். இந்த அரை சதத்தின் மூலம் உலகக்கோப்பை தொடர்களில் அதிக அரை சதம் அடித்த இந்தியர்கள் பட்டியலில் 12 அரை சதங்களுடன் இரண்டாவது இடத்தை விராட் கோலி உடன் பகிர்ந்து கொண்டார். முதல் இடத்தில் 21 அரை சதங்கள் எடுத்து சச்சின் இருக்கிறார்.

மேலும் 2023 ஆம் ஆண்டில் கேப்டனாக முதல் முதலில் ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்கின்ற நடப்பு ஆண்டு சாதனையை படைத்திருக்கிறார். இந்த ஆயிரம் ரன்களை எடுப்பதற்கு ரோகித் சர்மா 20 இன்னிங்ஸ்கள் எடுத்திருக்கிறார்.

மேலும் தற்பொழுது ரோகித் சர்மா மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டிலும் சேர்த்து 18,000 ரன்களை கடந்திருக்கிறார். சச்சின், விராட் கோலி, ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி ஆகியோர் இருக்கும் இந்த எலைட் பட்டியலில் ரோகித் சர்மாவும் தற்பொழுது சேர்ந்து இருக்கிறார்.

மேலும் நடப்பு உலகக் கோப்பையில் இதுவரை அதிக ரன்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேனாகவும், நடப்பு உலக கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் ஆகவும் தன் பெயரை பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!