“2011 எங்களுக்கு நடந்த அதேதான் இந்தியாவுக்கு.. அஷ்வினும் ஜெயிக்க வைக்க முடியாது” – முரளிதரன் பரபரப்பான கருத்து!

0
9379
Ashwin

இந்தியாவில் நடைபெற்ற 13 வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெல்வதை தவறவிட்டது.

இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது ஆடுகளம்தான். ஒருவேளை ஆடுகளத்தை கணிக்காமல் ரோகித் சர்மாவும் முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்திருந்தால் இதேதான் நடந்திருக்கும்.

- Advertisement -

இரண்டு வலிமையான அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில், இயற்கை முடிவை தீர்மானிப்பதாக எந்த நேரத்திலும் இருக்கக்கூடாது. எனவே ஆட்டத்தில் இரண்டாவது பகுதியில் பனிவரும் என்றால், மிகப்பெரிய இறுதிப்போட்டியில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானதாக ஆரம்பத்திலேயே இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ஆடுகளத்தில் வேகம் மற்றும் பவுன்ஸ் இருந்திருக்க வேண்டும்.

இப்படி இல்லாமல் இருவேறு வேகம் கொண்ட மற்றும் மெதுவான ஆடுகளத்தை அமைத்ததால்,முதல் பகுதியில் பேட்டிங் செய்ய கடினமாகவும், ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் பனி வந்ததும் பேட்டிங் செய்வது எளிதாகவும் மாறியது.

இது குறித்து இலங்கையணியின் லெஜென்ட் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் கூறும்பொழுது ” 2011 உலகக்கோப்பையில் நாங்கள் இதே தவறை செய்தோம். குமார் சங்கக்கரா முதலில் பேட்டிங் செய்ய விரும்பினார். நாங்கள் போராடி ஒரு நல்ல ஸ்கோரை பெற்றோம். ஆரம்பத்தில் அவர்களது இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினோம்.

- Advertisement -

பனி வருவதற்கு முன்னால் மேற்கொண்டு எங்களால் அவர்களது விக்கெட்டுகளை கைப்பற்ற முடியவில்லை. அதன் பிறகு ஆட்டம் ஒருதலைப் பட்சமாகத்தான் இருந்தது. கம்பீரும் தோனியும் ஆட்டத்தை முடித்தார்கள்.

அஸ்வின் இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தாலும் கூட முடிவு மாறி இருக்காது. பனிவந்த காரணத்தினால் பந்து திரும்பாமல் நேராகச் சென்றது. பேட்ஸ்மேன் இதை விளையாடுவதற்கு மிகவும் எளிமையானது. 2011 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் இதை நான் அனுபவித்தேன்.

ரோஹித் சர்மா உலக கோப்பையில் 130 ஸ்ட்ரைக்ரேட்டில் ரன்கள் எடுத்திருக்கிறார். இது டி20 கிரிக்கெட்டுக்குமே நல்லது. தற்பொழுது 36 வயதில் உடற்தகுதிக்கு நன்கு உழைக்க வேண்டும். அப்படி செய்வதாக இருந்தால் அவர் இன்னொரு உலகக் கோப்பையும் விளையாடலாம்!” என்று கூறியிருக்கிறார்!