இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறும் பதினாறாவது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது!
இதற்கு அடுத்து இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது!
இப்படி தொடர்ச்சியாக ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் விளையாடுவதற்கான காரணம், இந்திய மண்ணில் நடக்க இருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்தான் என்பது தெரிந்த விஷயமே!
இந்திய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக முழுமையாக ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நடத்தப்பட இருக்கிறது. அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது!
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அணியை அறிவிப்பதற்கு நாளை செப்டம்பர் ஐந்தாம் தேதியே கடைசி நாள். இந்திய அணியில் முன்னணி வீரர்களின் காயம் காரணமாக இதுவரையில் இந்திய அணி நிர்வாகம் உலகக் கோப்பை இந்திய அணி வீரர்களை அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் நாளை கட்டாயம் அறிவிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது. இதற்கு முன்பாக பெரிய செய்தி நிறுவனங்களில் இருந்து உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெறும் 15 வீரர்கள் யார்? என்கின்ற விஷயங்கள் கசிந்திருக்கின்றன.
வெளியாகி இருக்கும் தகவல்களில் தற்பொழுது ஆசிய கோப்பைக்கான 18 பேர் கொண்ட அணியில் இருந்தே 15 பேர் இறுதி செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த 18 பேரில் பேக்கப் வீரராக உள்ள சஞ்சு சாம்சன், அணியில் இடம் பெற்றுள்ள இளம் திலக் வர்மா மற்றும் காயத்தில் இருந்து திரும்பி வந்த பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவர் நீக்கப்பட்டு உள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
உத்தேசமான ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை 15 பேர் கொண்ட இந்திய அணி:
ரோகித், கில், விராட் கோலி, சூரியகுமார், ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சர்துல் தாக்கூர், பும்ரா, சமி மற்றும் சிராஜ்.






