14வருட சாதனை.. 22 பவுண்டரி.. 169ரன்.. பங்களாதேஷ் வீரர் போராட்டம் வீண்.. நியூசிலாந்து ஈஸி வெற்றி!

0
5047
Bangladesh

தற்பொழுது பங்களாதேஷ அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. சமீபத்தில் நியூசிலாந்து பங்களாதேஷ்க்கு சுற்றுப்பயணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இருந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டியில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாசில் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சால் 80 ரன்களுக்கு பங்களாதேஷ் அணி நான்கு விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் துவக்க வீரராக களம் இறங்கிய சௌமியா சர்க்கார் மிகச் சிறப்பான பேட்டிங்கை ஒரு முனையில் வெளிப்படுத்தினார்.

அவருக்கு பங்களாதேஷ் தரப்பில் இருந்து முஸ்பிகியூர் ரஹீம் மட்டுமே 45 ரன்கள் எடுத்து சிறிய ஒத்துழைப்பை தந்தார். இதற்கு அடுத்து மெகதி ஹசன் மிராஸ் எடுத்த 19 ரன்கள் மட்டும்தான் இரண்டாவது அதிகபட்சமாக அமைந்தது.

மிகச் சிறப்பாக விளையாடிய சௌமியா சர்க்கார் 151 பந்துகளில் 22 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உடன் 169 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். பங்களாதேஷ் அணி ஒரு பந்து மீதம் இருக்க 291 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. ஜேக்கப் டபி மற்றும் வில்லியம் இருவரும் தலா மூன்று விக்கெட் நியூசிலாந்து தரப்பில் கைப்பற்றினார்கள்

- Advertisement -

இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் வில் யங் 89, ரச்சின் ரவீந்தரா 45, ஹென்றி நிக்கோலஸ் 95, கேப்டன் டாம் லாதம் 34, டாம் ப்ளுன்டல் 24 ரன்கள் எடுக்க, நியூசிலாந்து அணி 46.2 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி இருக்கிறது.

2009 ஆம் ஆண்டு சச்சின் நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் 163 ரன்கள் எடுத்தது அந்த நாட்டில் அதிகபட்சமாக இருந்து வந்தது. தற்பொழுது அந்தச் சாதனையை 14 வருடங்கள் கழித்து பங்களாதேஷ் வீரர் சௌமியா சர்க்கார் முறியடித்திருக்கிறார்!