நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் சர்வதேச கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு வீரர்களின் கனவாக இருக்கிறது. தங்களது நாட்டிற்காக விளையாடும் ஒவ்வொரு வீரரும் ஒரு முறையேனும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட வேண்டும் என்பது அவர்களின் லட்சியமாக இருக்கும்.
தற்போது 13-வது 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. சில கிரிக்கெட் வீரர்கள் ஒரு நாட்டில் பிறந்திருந்தாலும் மற்றொரு நாட்டிற்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஒரு நாட்டில் பிறந்து அந்த நாட்டிற்காகவும் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி பேருரு நாட்டுக்காகவும் உலக கோப்பையில் விளையாடும் ஐந்து வீரர்களை பற்றி பார்ப்போம்.
வான் டெர் மெரவெ:
தென்னாப்பிரிக்கா நாட்டில் பிறந்த இவர் தென்னாப்பிரிக்கா அணிக்காக சர்வதேச ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்று இருக்கிறார். மேலும் 209 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணிக்கு விளையாடிய இவர் தற்போது நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் நெதர்லாந்து அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயான் மோர்கன்:
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர் தனது சொந்த நாட்டிற்காக 2007 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலகக் கோப்பையில் விளையாடினார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து நாட்டிற்கு குடி பெயர்ந்த இவர் நீண்ட காலமாக இங்கிலாந்து அணிக்காக விளையாடி வந்தார். மேலும் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக இருந்து அந்தணியை உலகக் கோப்பை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார். ஒருநாள் சர்வதேச போட்டிகளின் வரலாற்றில் இவரது தலைமையிலான இங்கிலாந்து அணி தான் முதல்முறையாக உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
எட் ஜொய்ஸ்:
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்காக விளையாடிய மற்றொரு வீரர் எட் ஜொய்ஸ். இவர் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் அயர்லாந்து அணிக்காக விளையாடினார். அடுத்து சில காலம் இங்கிலாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாடிய எட் ஜொய்ஸ் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது மீண்டும் அயர்லாந்து அணிக்காக பங்கேற்றார்.
ஆண்டர்சன் கம்மின்ஸ்:
வெஸ்ட் இண்டீஸ் ஐ சேர்ந்த வேகப்பந்துவீச்சாளரான இவர் 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பங்கேற்று விளையாடினார். இந்தத் தொடரில் இந்திய அணிக்கு எதிராக ஆட்டநாயகன் விருதும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு 15 வருடங்கள் கழித்து கனடா அணிக்காக உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்று விளையாடினார் கம்மின்ஸ்.
கெப்ளர் வெசல்ஸ்:
இரண்டு நாடுகளுக்காக முதல் முறையாக உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடிய வீரர் இவர்தான். தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான இவர் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடினார். அதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி இனவெறி குற்றச்சாட்டுகளில் இருந்து மீண்டு 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பங்கேற்க வந்த போது அந்த அணிக்கு கேப்டனாக இருந்து வழி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது .