” இவர் சிறப்பாக பந்து வீசுகிறார் ஆனால் எக்கனாமி மீது கவனம் செலுத்துவது அவசியம் ” – இளம் இந்திய பந்து வீச்சாளருக்கு கபில் தேவ் அறிவுரை

0
71
Kapil Dev

தற்போது இந்தியாவின் அதிவேக பவுலர் என்றால் அது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து கிளம்பி வந்திருக்கும் ஜம்மு எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக்தான். அவர் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசுவது அவரது தனிச்சிறப்பு இல்லை. அவரால் தொடர்ந்து மணிக்கு 150 கி.மீக்கு மேல் வீச முடிவதுதான் அவரது தனிச்சிறப்பு.

ஹைதராபாத் அணிக்கு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக, தனது மாநில வீரரான அப்துல் சமாத்தால் வந்தவர். 2021ஆம் ஆண்டு நடராஜன் கோவிட் தொற்றால் ஆடும் வாய்ப்பை பெற்று, தனது வேகத்தால் இந்த ஆண்டு ஹைதராபாத் அணி தன்னை தக்கவைக்கும் இடத்திற்கு முன்னேறி, 14 ஆட்டங்களில் வாய்ப்பையும் பெற்று 22 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.

- Advertisement -

இவரைப்பற்றியும் இவருக்கான இந்திய அணியின் வாய்ப்பு பற்றியும், இந்திய லெஜன்ட் ஆல்-ரவுண்டர், உலகக்கோப்பையை ஜெயித்த கேப்டன் கபில்தேவ் விளக்கமாகப் பேசியிருக்கிறார். அதில் அவர் “அவர் இந்திய அணிக்குத் தேர்வானது மகிழ்ச்சிதான். ஆனால் இதுகொஞ்சம் முன்கூட்டியே நடந்துவிட்டது. இனி இந்த லெவல் கிரிக்கெட்டில் அவருக்குக் குறைந்தது இரண்டு மூன்று வருடங்களாவது வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஏனென்றால் ஒன்றிரண்டு போட்டிகளோடு காணாமல் போன வீரர்கள் நிறையபேர் உண்டு. அவர் தொடர்ந்து முன்னேறும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல பந்துவீச்சாளர்களைக் கலந்து ஆலோசித்தும், அவர்களது பந்துவீசும் காட்சிகளைப் பார்த்தும் மேம்பட வேண்டும்” என்றார்.

மேலும் அவர் “இவர் வேகமாகவும் வீசுகிறார் விக்கெட்டையும் எடுக்கிறார். சிலர் வேகமாக வீசுவார்கள் விக்கெட் எடுக்க மாட்டார்கள். இவர் இரண்டையும் செய்வதால்தான் இந்திய அணிக்குத் தேர்வாகி இருக்கிறார். ஐ.பி.எல் பல வீரர்களுக்கு இந்திய அணிக்கான வாசல். ஆனால் இவர்களுக்கு சர்வதேச போட்டிகளில் இரண்டு மூன்று ஆண்டுகள் வாய்ப்பு தரவேண்டும்” என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து மேற்கொண்டு பேசிய அவர் “நீங்கள் மணிக்கு 150 கி.மீட்டருக்கு மேல் பந்த வீசுகிறிர்கள் என்றால் உங்களது எகானமி 9ஆக இருப்பது நல்லதல்ல. அது ஆறு 6 அல்லது 7க்குள் வரவேண்டும். அவர் இதை மேம்படுத்த வேண்டும். யார்க்கர்கள் வீசி பேட்டர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். ஆனால் இவையெல்லாம் காலப்போக்கில் உருவாகின்றன. அவர் தரமான சர்வதேச வீரர்களுக்குத் தொடர்ந்து பந்துவீசும் பொழுது அவர் மேம்படுவார். அவர் பவுலிங் எகானமியும் குறையும்” என்று விளக்கமாகக் கூறி முடித்தார்!

- Advertisement -