ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடுவர் அவுட் தராத நிலையில் ஜிம்பாப்வே வீரர் ஷான் வில்லியம்ஸ் களத்தை விட்டு வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் ஆப்கானிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரை வென்ற நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதி வருகிறது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. புல்வாயோ நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 157 ரன்கள் எடுத்தது. இதனை எடுத்து விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் என்ற ஸ்கோருடன் ஜிம்பாப்வே அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கியது.
எர்வின், ஷிக்கந்தர் ராசா பார்ட்னர்ஷிப்
தொடக்க வீரர் ஜாய்லார்ட் 8 ரன்களிலும், ஷாம் கரணின் சகோதரர் பென் கரண் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கட்டினோ டக் அவுட் ஆக டியான் மெயர்ஸ் ஐந்து ரன்களில் வெளியேறினார். இதனால் ஜிம்பாப்வே அணி 41 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.
இதனை அடுத்து கேப்டன் கிரேக் எர்வினும், சிக்கந்தர் ராசாவும் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிக்கந்தர் ராசா 62 ரன்கள் எடுத்த நிலையில் கேப்டன் ஷிக்கந்தர் ராசா 75 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். ஜிம்பாப்வே அணி மீண்டும் சரிவை சந்தித்த நிலையில், அந்த அணியின் அனுபவ வீரர் சென் வில்லியம்ஸ் கீழ் வரிசையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதத்தை எட்ட இருந்தார்.
நியாயமாக நடந்து கொண்ட வில்லியம்ஸ்
அப்போது 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஷீத் கான் பந்துவீச்சு எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். எனினும் பந்து பேட்டில் படவில்லை என கள நடுவர் அவருக்கு அவுட் தரவில்லை. இதனால் ரஷீத் கான் கடுப்பானார். எனினும் நியாயமாக நடந்து கொள்ளும் வகையில் சென் வில்லியம்ஸ் தாம் அவுட் என தெரிந்து களத்தை விட்டு வெளியே சென்றார்.
இதை பார்த்து ரஷீத் கான் நெகிழ்ச்சி அடைந்து அவருக்கு கைதட்டி மரியாதை செலுத்தினார். அரை சதம் போன்ற மைல்கல்லை எட்ட இருந்த நிலையில் தான் அவுட் என தெரிந்தவுடன் களத்தை சென் வில்லியம்ஸ் வெளியேறியது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்தது.
இதையும் படிங்க: 80 ஓவர்.. தென் ஆப்பிரிக்கா அணி ரன் குவிப்பு.. போட்டியை விட்டு விலகிய பாகிஸ்தான் வீரர்.. கேப்டன் பவுமா அசத்தல் சதம்.. 2வது டெஸ்ட்
ஜிம்பாப்வே அணி முதலில் இன்னிங்ஸில் 243 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 86 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கியது. இரண்டாவது நாள் ஆட்டநேரம் முடிவில் தற்போது அந்த அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்திருக்கிறது.