பயமுறுத்திய ஜிம்பாப்வே.. ஒரே கேட்சால் மாறிய ஆட்டம்.. சிக்கந்தர் ராசா சதம் வீண்

0
196

ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஹராரேவில் நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.தொடக்க வீரர்களான தவான் 40 ரன்களிலும் கேஎல் ராகுல் 30 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த சுப்மான் கில் மற்றும் இசான் கிஷன் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் கோரை உயர்த்தினர்.

இஷான் கிஷன் 50 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்ப, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி 82 பந்துகளில் தனது முதல் சதத்தை சுப்மான் கில் பூர்த்தி செய்தார் இதன் மூலம் 50 ஓவரில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது.

290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர் கைத்தானோ 13 ரன்களிலும் இன்னசென்ட் காலா 6 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். அந்த அணியின் நடுவரிசை வீரரான முன்னியங்கா 15 ரன்களிலும் வெளியேற ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரர்களான சென் வில்லியம்ஸ் மற்றும் சிக்கந்தர் ராசா பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். சென் வில்லியம்ஸ் 40 ரன்களில் ஆட்டமிழக்க தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ராசா சதம் விளாசினார்.

இறுதியில் பிராட் எவன்ஸ், ராசாவுக்கு பேட்டிங்கில் துணையாக நின்று 28 ரன்கள் சேர்த்து ஆவேஷ் கான் ஓவரில் ஆட்டமிழந்தார். இரண்டு ஓவரில் 17 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் ஷர்துல் தாக்கூர் 49 வது ஓவரை வீசினார்.இதில் அவர் துல்லியமாக பந்து வீசி ஜிம்பாப்வேக்கு நெருக்கடி அளித்தார்.

இந்த ஓவரில் சிக்கந்தர் ராசா அடித்த பந்தை பவுண்டரில் லைனில் அபாரமாக சுப்மான் கில் கேட்ச் பிடிக்க ஆட்டம் இந்தியா பக்கம் வந்தது. இதனை அடுத்து மூன்று பந்துகள் எஞ்சிய நிலையில் ஜிம்பாப்வே அணி 276-களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என முழுமையாக கைப்பற்றியது. இந்திய அணி பந்துவீச்சில் ஆவேஷ் கான் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.