முதன்முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது ஜிம்பாப்வே! குவியும் பாராட்டுகள்

0
185

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி புதிய வரலாறு படைத்திருக்கிறது ஜிம்பாப்வே அணி.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜிம்பாப்வே அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகள் முறையை 5 விக்கெட் மற்றும் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வென்று தொடரை கைப்பற்றியது. சம்பிரதாயபடி நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டி டவுன்வில்லே மைதானத்தில் நடத்தப்பட்டது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. துவக்க வீரர் டேவிட் வார்னர் ஒருமுனையில் நின்று கொண்டு மிகச்சிறப்பாக ஜிம்பாப்வே பந்துவீச்சை விளையாடினார். ஆனால் மறுமுனையில் வந்த வீரர்கள் எவரும் நிலைத்து நிற்காமல் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தனர். வார்னர் அரைசதம் கடந்து 94 ரன்கள் அடித்திருந்தபோது ஆட்டம் இழந்தார். 31 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அபாரமாக பந்துவீசிய ஜிம்பாப்வே வீரர் ரியான் பார்ல் மூன்று ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

எளிய இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. முதல் விக்கெட்டுக்கு 38 ரன்கள் சேர்த்திருந்தனர். அதன் பிறகு மளமளவென என விக்கெட்டுகள் விழுந்தது. 77 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்த ஜிம்பாப்வே அணிக்கு கேப்டன் சிக்கப்புவா மற்றும் முன்யோங்கா இருவரும் ஜோடி சேர்ந்தனர். 39 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்திருந்த ஜிம்பாப்வே அணி 142 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஜிம்பாவே அனைவரும் முதல் வெற்றி இதுவாகும். கிரிக்கெட் வரலாற்றில் தற்போது புதிய சாதனை படைத்திருக்கும் ஜிம்பாப்வே அணிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். கடந்த 45 நாட்களில் ஜிம்பாப்வே அணி முற்றிலும் மாறுபட்ட அணியாக காணப்படுகிறது. டி20 உலக கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு வங்கதேச அணியை ஒருநாள் தொடரில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இந்திய அணியை மூன்றாவது ஒருநாள் போட்டியில் கிட்டத்தட்ட வீழ்த்தும் தருவாய்க்கு சென்று, 13 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியை தழுவியது. தற்போது ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி புதிய சாதனை படைத்திருக்கிறது.

கத்துக்குட்டி அணி இப்படி அபாரமாக செயல்படுவது கிரிக்கெட் உலகிற்கு ஆரோக்கியமாகவும் பார்க்கப்படுகிறது.