வாழ்வா சாவா போட்டியில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு நுழைந்தது ஜிம்பாப்வே!

0
399
T20iwc2022

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரில் தகுதி சுற்று போட்டியில் இன்று ஜிம்பாப்வே ஸ்காட்லாந்து அணிகள் வாழ்வா சாவா போட்டியில் மோதின.

இந்த போட்டியில் டாசில் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வது என்று தீர்மானித்தது. ஸ்காட்லாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜார்ஜ் முன்சி மிகச் சிறப்பாக விளையாடி 51 பந்துகளில் 57 ரன்களை 7 பவுண்டரிகளுடன் அடித்தார். மெக் லிட் 26 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் மிகக் கட்டுக்கோப்பாக பந்துவீச ஸ்காட்லாந்து பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்கள் எடுக்க முடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி துவக்கத்தில் மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்து விட்டது. இதற்கடுத்து கேப்டன் எர்வின் மற்றும் சிக்கந்தர் ராஸா இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி ஜிம்பாப்வே அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
கேப்டன் எர்வின் 54 பந்துகளில் 58 ரன்கள் 6 பவுண்டரிகளுடன் எடுத்து ஆட்டமிழந்தார். சிக்கந்தர் ராஸா 23 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தப்போட்டியில் ஜிம்பாப்வே அணி இலக்கை 19.1 ஓவர்களில் எட்டினால் இந்தியா இடம்பெற்றிருக்கும் குழுவுக்குள் வர முடியும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி தனது குழுவில் முதலிடம் பிடித்து இந்திய அணி இடம் பெற்று இருக்கும் பி பிரிவுக்குள் வந்தது. பிரதான சுற்றில் ஜிம்பாப்வே அணியுடன் இந்தியா தனது கடைசி போட்டியில் மெல்போர்ன் மைதானத்தில் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

8 அணிகளை கொண்டு இரு குழுக்களாகப் பிரித்து நடத்தப்பட்ட தகுதிச்சுற்றில் ஏ பிரிவில் இலங்கை முதலிடத்தையும் நெதர்லாந்து இரண்டாம் இடத்தையும் பிடித்து, இலங்கை ஆஸ்திரேலியா இடம்பெற்று இருக்கும் குழுவுக்கும், நெதர்லாந்து இந்தியா இடம்பெற்றிருக்கும் குழுவுக்கும் வந்தன. இதேபோல் தகுதிச்சுற்று பி பிரிவில் ஜிம்பாப்வே அணி முதலிடத்தை பெற்று இந்தியா இருக்கும் குழுவுக்கும், அயர்லாந்து இரண்டாம் இடத்தைப் பெற்று ஆஸ்திரேலியா இருக்கும் குழுவுக்கும் வந்திருக்கின்றன.

- Advertisement -

நாளை எட்டாவது டி20 உலக கோப்பையில் பிரதான சுற்று ஆரம்பிக்க இருக்கிறது. இரண்டு போட்டிகள் நாளை நடைபெறும் நிலையில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து, இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ள இருக்கின்றன!