துபாயில் மட்டுமே விளையாடுகிறீர்கள்; ஷார்ஜா செல்ல பயமா? – இந்திய அணியை சீண்டிய பாகிஸ்தான் வீரர்!

0
94
Ind vs Pak

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி என்றாலே அது அதீத பரபரப்பிற்குச் சென்றுவிடும். போட்டி குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு இத்தகைய பரபரப்பை உண்டாக்கும். அதற்குக் கொஞ்சமும் குறையாமல் இரு அணி வீரர்களும் போட்டியை மிகத் தீவிரமாக அணுகி ரசிகர்களுக்கு விருந்து வைப்பார்கள்.

அதே சமயத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் போட்டிகளுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி இரு நாட்டுக்காகவும் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் எதிர்பார்ப்பையும் பரபரப்பையும் கூட்டுவார்கள். அது சில நேரங்களில் எல்லை மீறியும் போகும்.

- Advertisement -

உதாரணமாக ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட முதல் போட்டிக்கு முன்பாக, பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சாஹீன் ஷா அப்ரிடி காயத்தால் அணியில் இடம்பெறாதது இந்திய வீரர்களை நிம்மதி அடையச்செய்யும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரபல வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் கொளுத்திப் போட்டார். இதற்கு பதிலடியாக இந்திய வீரர் இர்பான் பதான், ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் இல்லாதது பாகிஸ்தான் வீரர்களை நிம்மதி அடைய செய்யும் என்று திருப்பினார்.

இப்படி இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களையும் தாண்டி, இரு நாட்டுக்காகவும் கிரிக்கெட் விளையாடிய வீரர்களையும் இந்தியா பாகிஸ்தான் மோதிக்கொள்ளும் போட்டிகள் மனரீதியாக தூண்டும். அவர்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தி கருத்து யுத்தம் நடத்த வைக்கும்.

தற்பொழுது இப்படியான ஒரு கருத்து யுத்தம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரருக்கு மத்தியில் தற்பொழுது நடந்து இருக்கிறது. இந்திய அணிக்காக விளையாடிய லெஜெண்ட் வீரர்களான கபில்தேவ் அசாருதீன் மற்றும் இவர்களோடு அதுல் வாசன் ஆகிய இந்திய வீரர்கள் இருக்க, தொலைக்காட்சி விவாதத்தில் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த சிக்கந்தர் பக்த் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை எடுத்து முன் வைத்தார்.

- Advertisement -

அவர் தொலைக்காட்சி விவாதத்தில் பேசும் பொழுது ” நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ஏன் இந்தியா சார்ஜா மற்றும் அபுதாபியில் விளையாட விரும்புவதில்லை? அவர்கள் துபாயில் மட்டுமே விளையாடுகிறார்கள்? நீங்கள் சார்ஜாவில் விளையாட பயப்படுகிறீர்களா? ” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர் ” இந்தியாவின் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டி சார்ஜா மைதானத்தில் இருந்தது. நீங்கள் அதை துபாய் என மாற்றிக் கொண்டீர்கள். ஷார்ஜாவுக்கு செல்ல பயம் கொள்கிறீர்களா? இந்தக் கேள்வியை நம்மவர்கள் கேட்டிருக்கிறார்கள் இதே கேள்வியை நான் உங்களிடம் கேட்கிறேன்” என்று இந்திய வீரர்களிடம் கேட்டார்.

இதற்கு இந்திய வீரர்களான கபில் தேவ் மற்றும் அசாருதீன் பதில் சொல்ல தயாராக இருக்கும் பொழுது அதுல் வாசன் குறுக்கிட்டு நகைச்சுவையாக “எங்களுக்கு அந்த மைதானம் மோசமாக இருந்தது. நாங்கள் இப்போது ஐசிசி யில் வலுவாக இருக்கிறோம். எனவே நாங்கள் அங்கு விளையாடவில்லை ” என்று கூற அங்கு நிலைமை சகஜமாகி சிரிப்பு உண்டானது!